மேலும்

சிறிலங்காவின் புதிய அரசாங்கமும் மகிந்தவின் பழைய அரசாங்கமும் ‘ஒரே முகத்துடனேயே’ உள்ளன – மாயா அருள்பிரகாசம்

Maya-Arul‘தமிழ் சமூகத்தினர் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை மிகவும் நேசிப்பதால் இவர்கள் தேர்தலில் சிறிசேனவுக்கு ஆதரவாக அதிகம் வாக்களித்துள்ளனர் எனவும் இதனால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழ் சமூகத்தின் ‘அடிப்படைத் தேவைகளை’ மீளவும் நிலைநிறுத்த வேண்டும்’

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு யுத்த மீறல்களை மேற்கொண்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டதையடுத்து, ஈழத்தமிழரான இசைக் கலைஞர் மாயா அருள்பிரகாசம் சனல் 04 செய்திச் சேவையிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்ப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட யுத்தம் மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மே 2009ல் சிறிலங்கா இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கையின் போது போர் வலயங்களில் அகப்பட்டிருந்த தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டதாகவும் இதில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

போரின் போது தமிழ்ப் புலிகள் சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியமை, போர் வலயத்தில் அகப்பட்டிருந்த தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை மற்றும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டமை உட்பட பல்வேறு யுத்த மீறல்களில் ஈடுபட்டதாக சிறிலங்கா அரச தரப்பு குற்றம் சுமத்தியது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக ஐ.நா தற்போது விசாரணைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் ராஜபக்ச இதற்குத் தனது ஒத்துழைப்பை வழங்க மறுத்துவிட்டார்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டவரும் போரின் இறுதிக்கட்டத்தில் ராஜபக்சவின் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்பட்டவருமான மைத்திரிபால சிறிசேன தற்போது அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய புதிய அதிபர் சிறிசேனவும் தனது நாட்டில் அனைத்துலக விசாரணைகள் இடம்பெறுவதற்கு தனது ஒத்துழைப்பை வழங்க மறுத்துள்ளதாக சனல் 04 செய்திச் சேவையிடம் அருள்பிரகாசம் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் கடந்த முப்பது ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல்வாதிகளே தற்போது சிறிசேனவின் அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பதால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ‘ஒரே முகத்துடனேயே’ உள்ளதாகவும் அருள்பிரகாசம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் சமூகத்தினர் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை மிகவும் நேசிப்பதால் இவர்கள் தேர்தலில் சிறிசேனவுக்கு ஆதரவாக அதிகம் வாக்களித்துள்ளனர் எனவும் இதனால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழ் சமூகத்தின் ‘அடிப்படைத் தேவைகளை’ மீளவும் நிலைநிறுத்த வேண்டும் என மாயா அருள்பிரகாசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் ராஜபக்ச அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவமயமாக்கல் போன்ற சில முன்னெடுப்புக்களைப் புதிய அரசாங்கம் களையும்போது மட்டுமே நாட்டில் மீளிணக்கப்பாட்டை நிலைநிறுத்த முடியும் என மாயா அருள்பிரகாசம் சனல் 04 செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

“ஐ.நா விசாரணையின் போது ராஜபக்ச ஹேக்கிற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் போருக்குப் பின்னான தற்போதைய சூழலில் அமைதியுடன் வாழவேண்டும் என்பதே எமது முதன்மையான கோரிக்கையாகும். போர் தொடங்கிய காலத்திலிருந்து பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் மீது பல்வேறு மீறல்கள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழ் மக்களும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களும் பலவந்தமாகக் காணாமற்போயுள்ளனர்” என அருள்பிரகாசம் தனது நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2009லிருந்து சிறிலங்காவிற்கு சனல் 04 தொலைக்காட்சி சேவை பயணிப்பதற்கான அனுமதி சிறிலங்கா அரசாங்கத்தால் மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோது மட்டும் சனல் 04 தொலைக்காட்சி சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் போது சனல் 04 தொலைக்காட்சி சேவையும் சிறிலங்காவுக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் நிபந்தனை விதித்திருந்தார். சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தொடர்பாக சிறிலங்கா உயர் ஆணையாளருடன் நேர்காணலை மேற்கொள்வதற்கு சனல் 04 தொலைக்காட்சி சேவை கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை இதற்கான எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக பாப்பரசர் ஒருவர் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை தற்போது மேற்கொண்டுள்ளார். தற்போதைய பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் கடந்த செவ்வாயன்று சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட போது, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா விசாரணைக்கு ஆதரவு வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

“‘பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு உண்மையைக் கண்டறிய வேண்டுமே தவிர பழைய காயங்களைக் கிளறுவதை நோக்காகக் கொண்டிருக்கக் கூடாது. நீதியை மேம்படுத்தல், ஆற்றுப்படுத்தல் மற்றும் ஒற்றுமை போன்றன இதற்கு மிகவும் அவசியமானவையாகும்” என சிறிலங்காவின் தலைநகரான கொழும்பைச் சென்றடைந்த போது பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

“மீள்கட்டுமானம் என்பது உட்கட்டுமானங்களைப் புனரமைத்தல் மற்றும் வளங்களைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியிருப்பினும், இதற்கும் மேலாக, மனித கண்ணியத்தை ஊக்குவித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும் உள்ளீர்க்கப்படுதல் போன்றன முதன்மைப்படுத்தப்பட வேண்டும்” என பாப்பரசர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட பாப்பரசர் சிறிலங்காவின் புதிய அதிபர் சிறிசேனவையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது தனது அரசாங்கம் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட பின்னர் மக்கள் மத்தியில் சமாதானம் மற்றும் நட்புறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும் சிறிசேன, பாப்பரசரிடம் தெரிவித்தார்.

ஒரு கருத்து “சிறிலங்காவின் புதிய அரசாங்கமும் மகிந்தவின் பழைய அரசாங்கமும் ‘ஒரே முகத்துடனேயே’ உள்ளன – மாயா அருள்பிரகாசம்”

  1. dwkdavid says:

    maya.
    be frank
    tell the truth
    Dont play politics with the life of tamils

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *