மேலும்

அரசியல் செல்வாக்கில் தூதுவர்களானவர்களுக்கு ஆப்பு வைக்கிறார் மங்கள சமரவீர

Mangala-samaraweeraவெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளை உடனடியாகத் தமது பதவி விலகல் கடிதங்களை ஒப்படைக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரவுள்ளார்.

அரசியல் செல்வாக்கில் இராஜதந்திரப் பதவிகளைப் பெற்றவர்கள் தாமாகப் பதவி விலகுவதற்கு ஒருவார காலஅவகாசத்தை மங்கள சமரவீர வழங்கவிருக்கிறார்.

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலர் சித்ராங்கனி வாகீஸ்வரா பொறுப்பேற்றதும், அரசியல் செல்வாக்கில் இராஜதந்திரப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும், கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்படவுள்ளனர்.

எனினும், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இளநிலை அதிகாரிகளாக பெருமளவானோர் அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் உடனடியாக திருப்பி அழைத்தால், வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் முடக்க நிலையை அடையும்.

எனவே இந்த விடயத்தில் சீரானதொரு அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனத்தின் போது லக்ஸ்மன் கதிர்காமரால் கடைப்பிடிக்கப்பட்ட பழைய நடைமுறை மீளவும் நடைமுறைப்படுத்தப்படும்.

எனவே, 70 வீதமான வெளிநாட்டு தூதுவர்கள் இராஜதந்திரிகளாகவும், 30 வீதமானோர் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் நியமிக்கப்படுவர்.

அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்படுவோர் கூட நிபுணத்துவம், திறமை அடிப்படையில் தான் தெரிவு செய்யப்படுவரே தவிர, ஆதரவாளர்களாக இருக்கமாட்டார்கள் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள 62 சிறிலங்கா தூதரகங்களில் 35 தூதரகங்களில் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களே மகிந்த ராஜபக்ச அரசினால் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *