மேலும்

சீன-அமெரிக்க உறவுகளின் பண்புகள் மற்றும் அமெரிக்க-இந்திய உறவுகளின் பண்புகள் : ஓர் ஒப்பீடு

US-CH-IND - flagsஇந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 2014ல் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றி, இந்தியாவை பெரிய அளவிலான அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை செய்வதற்கும், உள்ளக அளவிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்குமான திறனைக் கொண்ட அரிய சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது.‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.

கிழக்காசிய மற்றும் அவுஸ்திரேலிய பகுதி கடந்த ஆண்டு இறுதி விடுமுறை நாட்களுக்கு முன்னதாக உலக வல்லரசுகளின் தலைவர் எல்லோரதும் பயண மையமாக இருந்தது.

ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் கூட்டம், ஆசியான் நாடுகளின் கூட்டம், பெரிய இருபது நாடுகளின் கூட்டம் என உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் வல்லமைபெற்ற தலைவர்கள் அனைவரும் இரு வாரகாலத்திற்குள் உலகின் தென் கிழக்கு கோடியில் கடந்த ஆண்டு இறுதியில் குவிந்து இருந்தனர்.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் மீதும் கிழக்காசியா மீதும் வல்லரசுகளின் எதிர்பார்ப்புகளும் கொள்கைகளும் ஒளவுக்கு வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக உலக அரசியல் பொருளாதார ஓட்டத்தில் ஒரு பிரதான பாத்திரத்தை வகிக்க முனையும் இந்திய வல்லரசின் நிலையை நோக்குவது முக்கியமாகிறது.

இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 2014ல் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றி, இந்தியாவை பெரிய அளவிலான அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை செய்வதற்கும், உள்ளக அளவிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்குமான திறனைக் கொண்ட அரிய சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது.

அந்தவகையில் சீன-அமெரிக்க உறவுகளின் பண்புகள் குறித்தும் அமெரிக்க-இந்திய உறவுகளின் பண்புகள் குறித்தும் ஒப்பிட்டு பார்ப்பது இங்கே கருப்பொருளாக எடுத்து கொள்ளப்படுகிறது. இதன் மூலம் இந்திய நலன்களிலே கரிசனை கொண்டு தமது நலன்களை வகுக்க நிற்கும் தமிழின விடுதலை குறித்த தெளிவும் காணலாம்.

இந்தியாவை தமது இயற்கையான ஓரணியாளனாக பார்க்கும் அமெரிக்க ஆய்வாளர்கள், இந்திய மாக்கடல் பிராந்தியத்தை இந்தியாவூடாக தமது உலக தலைமைத்துவ கொள்கையின் அங்கமாகவே பார்க்கின்றனர். அதேவேளை இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீன பிரசன்னமும் அதன் விரிவாக்கமும், கடற்பிராந்திய விவகாரங்களில் சீனாவின் புதிய துணிச்சல் மிக்க செயற்பாடுகளும் இந்திய முப்படைகளினதும்  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன்மையை உறுதி செய்துள்ளது.

அடுத்த சிலஆண்டுங்களுக்கு இந்தியாவை பாதுகாப்பு நிலையில் மேலும் செயல்திறன் கொண்டதாக ஆக்கவேண்டும் என்பதுதான் நோக்கமாயின் அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பம் இந்தியாவின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகிறது.

இருந்தபோதிலும் நவீன யுத்த பாவனை உபகரணங்களான, கடந்த பத்து ஆண்டுகாலத்திற்குள் தயாரிக்கப்பட்ட அமெரிக்க யுத்த விமானங்களும், வாகனங்களும், கள,தள உபயோக சாதனங்கள் விற்பனையில் சேர்க்கப்படுவதில்லை என்பது இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் நீண்டகால குறைசொல்லாகவே தெரிகிறது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2000ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை 7.4 சதவீதமாக இருந்தது. ஆனால் 2012ம் ஆண்டில் 4.5 சதவீதமாக குறைந்துபோனது. இதற்கு இந்தியா உள்ளக ரீதியான வளர்ச்சியை மையமாக கொண்டு செயற்பட்டதே காரணம் என்று அறிக்கைகள் வந்தாலும், போதிய மின்சக்தி இன்மை உற்பத்தித்துறையை பெருமளவில் பாதித்ததாக அமெரிக்க அணுமின் உலை முதலீட்டாளர்களின் பார்வையாக உள்ளது.

மேலும் இந்திய- அமெரிக்கஉறவில் சோனியாகாந்தி-மன்மோகன் சிங் கூட்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பெரிதாக நல்லுறவு நிலவவில்லை. அமெரிக்காவும் இந்தியாவும் ஒருவரில் ஒருவர் காறி உமிழ்ந்து கொள்ளும் நிலை இருப்பதாக அன்றைய ஆய்வாளர்கள் கூறினர்.

மத்தியஆசிய விவகாரத்தில் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மதவாத தலிபான் ஆட்சியை உருவாக்கிவிட்டு அமெரிக்கா தன்னை முற்றுமுழுதாக விடுவித்து கொள்ளும் நிலையும், ஈரானிலிருந்து எண்னை இறக்குமதிதடைவிவகாரத்தில் இந்தியா பின்னடிப்பதும் அமெரிக்க-இந்திய உறவில் இன்னமும் பல விடயங்கள் முரண்பாடாக  உள்ளன.
மேலும் கடந்த ஆண்டும் டிசம்பர் மாதமளவில் அமெரிக்காவுக்கான இந்திய பதில் தூதுவர் நியூயோர்க் நகரில் கைது செய்யப்பட்டு வீசா மோசடி குற்றச்சாட்டில் பொலீசாரால் நடாத்தப்பட்டவிதம் இந்திய அதிகாரிகள் மட்டத்தில் பெரும் மனக்கசப்பை உருவாக்கி இருந்தது.

பதிலுக்கு இந்தியாவில் டெல்லி,அமெரிக்க தூதரகம் முன்னால் இருந்த பாதுகாப்பு அரண்களை இந்திய பொலீசார் அகற்றிவிட்டனர். நிலைமையை சரிசெய்யவென அமெரிக்காவிலிருந்து வந்த குழுவை இந்திய அரசியல்வாதிகள் சந்திக்கவும் மறுத்து விட்டனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் அமெரிக்க-இந்திய உறவு சிக்கல்களில் இருந்ததன.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மாறாக இன்று அமெரிக்காவினால் இந்திய-அமெரிக்க உறவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சலுகை முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவை புவியியல் ரீதியாகவும் இராசதந்திர ரீதியாகவும் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரநிலையிலும் வலுவுள்ள ஒரு நாடாக மாற்றுவதில் முழு ஆதார உடன்படிக்கைகளுக்கு அமெரிக்கா தயாராக உள்ளது.

‘இந்தியா கிழக்கே நோக்கிய பார்வை என்ற கொள்கைப்போக்கிற்கும் மேலாக இந்தியா கிழக்கு நாடாக மாறவேண்டும்’ என்பது அமெரிக்க பார்வை ஆகும். எண்பதுகளின் கடைசியில் கம்யூனிசத்தின் வீழ்ச்சி, அதனைத்தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படைவாதம் எனப் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருந்தது அமெரிக்கா. இதனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக தென்கிழக்காசியா மீதான அமெரிக்க கொள்கையில் தளம்பல் நிலை இருந்தது.

தற்பொழுது ஆசியாவை ‘மீள் சமநிலைப்படுத்தல்’ என்ற கோட்பாட்டினை முன்வைத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு எனப்படக்கூடிய ஆசியான் நாடுகளுடன் இணைந்து செயற்பட இந்தியா முன்வரவேண்டும் என்பது அமெரிக்க பார்வையாக உள்ளது.

ஈரானை நோக்கிய அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு நகர்வுக்கு இந்தியா ஈரானிய எண்ணெய் வளங்களில் தங்கி இராது இந்தோனேசிய எண்ணெய் வளநிலையை நாடுவது அமெரிக்க நுகர்வு சந்தையை பாதிக்காது என்பதுவும் ஒரு பார்வையாக உள்ளது.

இந்தியாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்புநாடாக மாற்றுவதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களால் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வரும் நாடு என்பதை அமெரிக்கா இனங்கண்டுள்ளது. இதனால் கடந்தகால உறவு ஏற்ற இறக்கங்களுக்கு மேலாக இந்திய- அமெரிக்க உறவை வலுவூட்டும் போக்கு தற்போது காணப்படுகிறது.

பிரதமர் மோடி அவர்கள் புதிதாக பதவியேற்றபின் இந்தியாவுக்கு தனது பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க இராசாங்கசெயலர் ஜோன் கெரி அவர்கள ;இந்திய புதிய அரசாங்கத்தை அமெரிக்க, ஜப்பான் அவுஸ்திரேலிய கூட்டுக்குள் வைத்திருப்பதில் கூடிய கவனம் செலுத்தும் என்பதை வலியுறுத்தி இருந்தார். தற்போது இந்திய-அமெரிக்க உறவு மிகவும் பலம் பெற்ற நிலையை எட்டிஉள்ளது.

அடுத்துவரும் குடியரசு தினவிழாவில் அதிபர் ஒபாமா அவர்கள் பங்குபற்றவுள்ளார் எனும் செய்தி இதனை உறுதி செய்துள்ளது. தனது பதவிக்காலத்தில் ஒரு அமெரிக்கத் தலைவர் இருமுறை இந்தியாவுக்குப் பயணம் செய்வது இதுவே முதல் தiவை என அமெரிக்கப் பத்திரிகைகள் பெருமைப்பட்டுக் கொள்கின்றன.

அனைத்துலக அளவில் இந்தியாவை வலுவுடைய நாடாக ஆக்குவதில் அமெரிக்காவுக்கு உள்ள அக்கறையும் இந்தியாவின் தற்போதைய அரசாங்கத்தின் உலக அளவில் விரிவடைந்து செல்வதில் உள்ள அவசரத்தன்மையும் மிகவும் பொருத்தமான அரசியல் பொருளாதார பாதுகாப்பு உடன்பாடுகளிற்கு வழிவகுத்து நிற்கிறது.

தற்போதைய இந்திய-அமெரிக்க வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இராணுவ தளவாட ஒப்பந்தகாரராக அமெரிக்க கம்பனிகளே திகழ்கின்றன. அமெரிக்க Lockheed C-130J, Boeing C-17 போன்ற போக்குவரத்து விமானங்கள் இந்திய விமானப்படையின் உபயோகத்தில் உள்ளது, அதேபோல P-8i planes இந்திய கடற்படையின் அரபிக் கடலில் இடம் பெறக்கூடிய கடல் சட்டமீறல்கள் மீதான கண்காணிப்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது, மிகவிரைவில் இந்திய இராணுவத்தின் தாக்குதிறன் பாவனைக்கு Apache and Seahawk helicopters  விடப்படஉள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதிபர் ஒபாமாவின் பதவிக்கால முடிவின் பின்னர் புதிதாக வரவிருக்கும் அதிபர் Marine One chopper cabins உற்பத்தி செய்யும் தொழிற்;சாலையை ஐதராபாத் நகரில் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த பாகங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனம் இந்தியாவிலிருந்து பெற்றுகொள்ள உள்ளது.

இவ்வாறான அமெரிக்க-இந்திய உறவு வளர்ச்சிக்கும் அதன் பிரதான கேந்திர நகர்வுகளுக்கும் ஏற்ப மோடி அரசாங்கம் தனது ஆரம்ப முயற்சிகளின் வரிசையில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் விதமாக தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளின் சினேகித உறவை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளது.

அத்துடன் உள்ளக ரீதியில் இந்தியாவை பொருளாதார வலுமிக்க நாடாக ஆக்குவதும், பாதுகாப்பு மனோதிட நிலையை ஊட்டுவதும், சமூகங்களிடையே மேலைத்தேய தொழில்நுட்பத்துடன் கூடிய பண்பாட்டை வளர்ப்பதுவும் இந்த நகர்வுகளின்அடிப்படை தேவையாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்திய மாக்கடல் பிராந்திய நலன்களின் அடிப்படையை தமது பார்வையாக கொண்ட ஆய்வாளர்களின் பார்வையில் இந்தியாவின் தேவையும் விருப்பும் அமெரிக்க இராசதந்திர நகர்வு நிலையும் இந்தியா தேவையற்ற பாதுகாப்பு ஆயுத யுத்தபழு நிலைக்குத் தள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக கருதுகின்றனர்.

ஏற்கனவே இந்த ஆய்வில் குறிப்பிட்டது போல ஒப்பீட்டு ஆய்வு என்ற நிலைக்கு ஏற்ப சீன-அமெரிக்க உறவுதன்மை இந்திய- அமெரிக்க உறவுத் தன்மையிலிருந்து பார்க்கும் போது இந்தநகர்வு குறித்து தெளிவாக காணலாம்.

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *