மேலும்

நள்ளிரவு சதித்திட்டம் – மகிந்த, கோத்தா மீது விரைவில் விசாரணை

Mahinda-Gotaஅதிபர் தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்து விட்டுத் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட சதித்திட்டம் குறித்து, புதிய அரசாங்கம் விசாரணை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலின் ஆரம்ப கட்ட முடிவுகளில் தாம் தோல்வியடைந்து வருவதை உணர்ந்து கொண்ட மகிந்த ராஜபக்ச, சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை தக்கவைக்க முயன்றதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்கவிருப்பவர் என்று கருதப்படும் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில்,

“மிக அமைதியாக ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக, சிலர் கூறுகின்றனர். ஆனால் அது பொய்யானது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை தேர்தல் ஆணையாளர் பிரகடனப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்சவும், இராணுவத் தளபதி, காவல்துறைமா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோரின் துணையுடன் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால், நல்ல அதிகாரிகளான இவர்கள் மூவரும் ஒரே குரலில் அவர்களின் முடிவுக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டனர்.

இதனால் நாடு பெரும் இரத்தக் களரியில் இருந்து தப்பிக் கொண்டதுடன் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட்டது.

புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதும், முதல்வேலையாக, இந்த சதித்திட்டம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

தேர்தலுக்குப் பின்னர் திரைமறைவில் என்ன நடந்தது என்று இந்த நாட்டு மக்களுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் தெரிய வேண்டும்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இராணுவத் தளபதி, காவல்துறை மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோர் மகிந்த ராஜபக்சவினால், அவசரமாக அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டனர்  என்பதற்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

உடனடியாக வாக்குகள் எண்ணிக்கையை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவே அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அதிஸ்டவசமாக இராணுவத் தளபதியும், காவல்துறைமா அதிபரும், இந்த சட்டவிரோத நடவடிக்கையில் தம்மால் பங்கெடுக்க முடியாது என்று மகிந்த மற்றும் கோத்தாபயவிடம் உறுதியாக கூறிவிட்டனர்.

அத்துடன், தமது கட்டுப்பாட்டில் இருக்கும் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு சட்டத்துக்கு முரணாக உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்றும் அவர்கள் அந்த திட்டத்துக்கு உடன்பட மறுத்து விட்டனர்.

சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு முரணான இந்த நடவடிக்கை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சட்டமா அதிபர் தெரிவித்து விட்டார்.

இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதே சகோதரர்கள் இருவரினதும் திட்டமாக இருந்தது.

இந்த நாட்டு மக்களுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் இது தெரிய வேண்டும்.

உறுதியான நடவடிக்கையை எடுத்த மூன்று அதிகாரிகளுக்கும் அரசாங்கம் நன்றிக்கடன்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு பிரசுரத்தை  வெளியிட்டிருந்தாலும், இராணுவத் தளபதி இந்தக் கட்டத்தில் பொறுப்புடன் நடந்து கொண்டதை அரசாங்கம் மதிக்கிறது.

தமக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யுமாறு முன்னைய அரசாங்கத்தினால் காவல்துறை மற்றும் இராணுவம் மீது கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அதிகபட்சம் சுதந்திரமாக செயற்பட்டிருந்தனர்.

காவல்துறை மா அதிபர் இலங்ககோன் மிகவும் நன்றாகப் பணியாற்றினார்.” என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடைசி நேரத்தில் இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைத் தக்க வைக்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மகிந்த ராஜபக்சவின் ஊடகச்செயலர் விஜயானந்த ஹேரத் மறுத்துள்ளார்.

இராணுவத் தளபதி, மற்றும் கால்துறைமா அதிபர் ஆகியோர், நள்ளிரவில் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டது, பாதுகாப்புக் குறித்த உத்தரவுகளை வழங்குவதற்கே என்றும் அவர் நியாயப்படுத்தியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *