மேலும்

நாளை வாக்கு எண்ணும் பணி தாமதமாகும் – தேர்தல் ஆணையாளர்

ballot-box1சிறிலங்காவில் நாளை தேர்தல் முடிந்தவுடன், வாக்கு எண்ணும் பணி முன்னர் திட்டமிட்டவாறு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“நாளை காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும் வகையில், எல்லா ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.

உரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள், வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு முடிவுக்கு வந்த பின்னர், எல்லா வாக்குப் பெட்டிகளும், வாக்கு எண்ணும் நிலையத்தை வந்தடைந்த பின்னரே, வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும்.

வாக்களிப்பு மாலை 4 மணிக்கு முடிந்தவுடன், 6 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிப்பது என்று முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

எங்கேனும் ஒரு இடத்தில் பிரச்சினை என்றாலும், மறுவாக்கெடுப்புக் குறித்து தீர்மானிக்க வேண்டும் என்பதால், எல்லா வாக்குப்பெட்டிகளும், வாக்குகளை எண்ணும் நிலையத்துக்கு வந்து சேரும் வரை காத்திருப்போம்.

முழுமையாக வந்தடைந்த பின்னரே வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும்.

ballot-box1ballot-box2வடக்கில், வாக்களிப்பைக் குழப்பும் விதத்தில், இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள அறிக்கைகள் குறித்து விசாரிக்கப்படும்.

நீங்கள் வாக்களிப்பதை இராணுவம் தடுக்க முடியாது.

பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இராணுவம் வாக்களிப்பதை தடுக்க முயன்றால், அவர்களின் உத்தரவை புறக்கணிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது.

உள்ளூர் ஊடகங்கள், சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு ஓடியுள்ளதாகவும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பொய்யான தகவல்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

சிலரின் பெயரைக் கெடுக்கும் வகையில், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *