மேலும்

சிறிலங்கா அதிபர் முஸ்லீம்களின் வாக்குகளையும் தற்போதைய தேர்தலில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை?

Sri_Lanka_Muslim_Congressசிங்கள பௌத்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.ராஜபக்ச மற்றும் திரு.மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சிங்கள மக்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதால் முஸ்லீம் மக்களினதும் தமிழ் மக்களினதும் வாக்குகள் மிக முக்கியமானவை என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Hindu ஆங்கில நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் MEERA SRINIVASAN எழுதியுள்ள சிறிலங்கா தேர்தல பற்றிய இரண்டாம் ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

ஜனவரி 08 அன்று சிறிலங்காவில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவித்த பின்னர் இதுவரை அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பணியாற்றிய குறைந்தது மூன்று முக்கிய முஸ்லீம் அரசியல்வாதிகள் எதிரணியுடன் இணைந்துள்ள நிலையில் பெரும்பாலான முஸ்லீம்களின் வாக்குகளை ராஜபக்ச தற்போதைய தேர்தலில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என எதிர்வுகூறப்படுகிறது.

நாட்டின் பிரதான முஸ்லீம் கட்சியான சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேர்தலில் எத்தரப்பிற்கு ஆதரவளிக்கப் போகிறது என்கின்ற ஊகம் நிலவிய போது, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாட் பதியுதீன் தான் அரசாங்கத்தை விட்டு விலகி எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக அறிவித்தார். இது எவராலும் எதிர்பார்க்கப்படவில்லை.

ஏனெனில் திரு.பதியுதீன், சிறிலங்கா அதிபரின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராவார். தான் அரசாங்கத்தை விட்டு வெளியேவதற்கு “முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தவறிவிட்டதே காரணம்” என திரு.பதியுதீன் அறிவித்திருந்தார்.

பதியுதீனின் இந்த அறிவிப்பானது சிறிலங்கா நீதி அமைச்சரும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கான அழுத்தத்தைக் கொடுத்தது. “எமக்கு வேறெந்தத் தெரிவும் இல்லாததால் நாங்கள் அரசாங்கத்தை விட்டு விலகுகிறோம். இல்லாவிட்டால் நாங்கள் எமது வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது” என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அடிமட்ட உறுப்பினர்களும் பெரும்பாலான முஸ்லீம்களும் சிறிலங்காவை ஆளும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகளை அளிப்பது எனத் தீர்மானித்த போதே சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும் தனது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்து அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியுடன் இணைந்து கொண்டது. இந்த மாற்றம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவில் உள்ள முஸ்லீம் நிலையங்கள், வணக்கத்தலங்கள் போன்றன மீது மிகவும் மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் சிறிலங்கா வாழ் முஸ்லீம்களின் மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தென் கரையோர நகரான அளுத்கமவில் கடந்த யூன் மாதத்தில் இடம்பெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் முஸ்லீம் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான வெறுப்பு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்தத் தாக்குதலை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மிகவும் வன்மையாகக் கண்டித்த போதிலும், இது அரசாங்கத்தை விட்டு வெளியேறவில்லை. இது இதன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்தது. “நாங்கள் இந்தத் தருணத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறாவிட்டால் எமது கட்சியானது அதன் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்” என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் மூத்த  உறுப்பினர் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்குப் பிறகு சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை சமூகங்களில் முஸ்லீம் சமூகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய சிறிலங்காவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள வாக்காளர்களில் பத்து சதவீதத்தினர் முஸ்லீம்களாவர். சிங்கள பௌத்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.ராஜபக்ச மற்றும் திரு.மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சிங்கள மக்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதால் முஸ்லீம் மக்களினதும் தமிழ் மக்களினதும் வாக்குகள் மிக முக்கியமானவை என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம்கள் கொண்டுள்ள முரண்பாட்டைத் தீர்ப்பது தொடர்பாக தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை. சிறிலங்கா அரசாங்க ஆதரவுடன் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தப்படும் பொது பல சேன போன்ற பௌத்த தீவிரவாத அமைப்பிற்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் இடையில் கடந்த சில ஆண்டுகளாக அதிருப்தி நிலவுகிறது.
சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக பொது பல சேன பல்வேறு வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளது. கடந்த யூனில் இடம்றெ;ற அளுத்கம தாக்குதலும் ஒன்றாகும். இவ்வாறான பௌத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேன திரு.ராஜபக்சவுக்குத் தனது ஆதரவை வழங்குவதாக அண்மையில் அறிவித்த கையோடு சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும் பிரதி முதலீட்டுத்துறை அமைச்சருமான பைசார் முஸ்தபா அரசாங்கத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார். பொது பல சேன சிறிலங்கா அதிபருக்கு ஆதரவளித்தால் தான் அரசாங்கத்தை விட்டு விலகுவேன் என முன்னர் அமைச்சர் முஸ்தபா தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் முஸ்லீம் கட்சிகள் ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக இருந்துள்ளனர். முஸ்லீம்கள் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தமது ஆதரவை வழங்கியதாகவும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ராஜபக்ச அரசாங்கம் முஸ்லீம் தலைவர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகளை வழங்கியதால் முஸ்லீம்களின் வாக்குகள் திரு.ராஜபக்சவைச் சென்றடைந்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “ஆனால் ராஜபக்ச அரசாங்கம் மக்களின் இந்த ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை” என கிட்டத்தட்ட 50 முஸ்லீம் அமைப்புக்களைக் கொண்ட  சிறிலங்கா முஸ்லீம் பேரவையின் தலைவர் என்.எம்.அமீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லீம்களின் ஆதரவு திரு.ராஜபக்சவை மட்டுமன்றி முஸ்லீம் சமூகத் தலைவர்களையும் சென்றடையாது. தமது தலைவர்கள் எப்போதும் ஆளுங்கூட்டணிக்கு அடங்கிப்போகின்றவர்களாகவும் வெறும் பார்வையாளர்களாகவும் மட்டுமே இருந்துள்ளனர் என முஸ்லீம் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

“நாங்கள் மக்களின் கருத்துக்களைத் தீவிரமாக நோக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்து அவற்றுக்குத் தீர்வைப் பெற நாங்கள் முயற்சிக்காது விட்டால் இவ்வாண்டு நடைபெறலாம் என எதிர்வுகூறப்படும் நாடாளுமன்றத் தேர்தல்கள் போன்ற தேர்தல்களில் நாம் இழப்பைச் சந்திக்க வேண்டியேற்படும்” என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

வாக்காளர்களிடமிருந்து இடப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே முஸ்லீம் தலைமைத்துவம் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. 2010ல் முன்வைக்கப்பட்ட இரண்டு தடவைகளுக்கு மேல் அதிபராகப் பதவியேற்கலாம் என்கின்ற சட்டத் திருத்தத்தைக் கொண்ட 18வது திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு வழங்கியதை எண்ணித் தான் வருத்தப்படுவதாக, அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்த போது திரு.ஹக்கீம் குறிப்பிட்டார்.

இத்திருத்தச் சட்டத்திற்குத் தான் ஆதரவு வழங்கியதை நினைத்து வருத்தப்படுவதாகவும், இது தான் விட்ட தவறு எனவும் இதனை நிவர்த்தி செய்ய விரும்புவதாகவும் திரு.ஹக்கீம் குறிப்பிட்டார்.

இதேவேளையில் திரு.ராஜபக்ச தனக்கு முஸ்லீம் மக்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என நம்புகிறார். “உங்களது வாக்குகளை எந்தவொரு அரசியல்வாதியின் பேரம்பேசலுக்கும் விட்டுவிடாதீர்கள் என நான் உங்களைக் கேட்கிறேன். யார் எந்தத் தரப்பிற்கு மாறுகிறார்கள் என்பது ஒரு பெரிய பிரச்சினையல்ல. நான் எப்போதும் உங்களது பக்கமே இருப்பேன். என்னை நம்புங்கள். நான் உங்கள் அனைவரையும் பாதுகாப்பேன்” என கடந்த வெள்ளியன்று முஸ்லீம் மக்கள் கணிசமானளவில் வாழும் மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திரு.ராஜபக்ச உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் சிறிது நேரம் தமிழிலும் உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *