மேலும்

தேர்தலில் இராணுவத் தலையீடு குறித்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கவலை

foreign monitors (2)அரச வளங்களின் பயன்பாடு மற்றும், இராணுவத் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கருத்து வெளியிட்டுள்ள கொமன்வெல்த் கண்காணிப்பாளர் குழுவின் தலைவர் கலாநிதி பாரத் ஜக்டியோ,

“தேர்தல் நாளன்றோ, அதற்கு முதல் நாளோ, இராணுவம் பயன்படுத்தப்படுவது குறித்த முக்கியமான கவலை உள்ளது.

தேவை எனக் கருதினால், இதுகுறித்து விவாதிக்க இராணுவத்துடன் ஒரு சந்திப்பைக் கோருவோம்.

அரசாங்க வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது, வன்முறைகள், முறைகேடுகள் குறித்தும் எமக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த் கண்காணிப்பாளர்கள் ஒன்பது பேர், சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவும், அரச வளங்களின் துஸ்பிரயோகம், காவல்துறை செயற்திறனற்றிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

தமது கலந்துரையாடல்களில் முக்கியமாக அரச வளங்களின் துஸ்பிரயோகம், காவல்துறையின் பாகுபாடான செயற்பாடுகள் குறித்து கவலை எழுப்பப்பட்டதாக, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளரும், தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் குழுவுக்குத் தலைமை தாங்கி வந்துள்ளவருமான எஸ்.வை.குரேசி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *