மேலும்

ஜெகத் டயஸ் நியமனத்துக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

Major General N.A Jagath C Diasஇறுதிக்கட்டப் போரில் அதிகளவான மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய, மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை, சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளதற்கு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நியுயோர்க்கைத் தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இறுதிக்கட்டப் போரில் அதிகளவான மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய, மூத்த அதிகாரிக்கு, சிறிலங்கா அரசாங்கம் பதவி உயர்வு வழங்கியிருப்பது, போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்துவதாக, சிறிலங்கா அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதி மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது.

போர்க்கால மீறல்கள் குறித்து, நியாயமான வகையில் பொறுப்புக்கூற நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் ஒரு படைப்பிரிவின் ஜெனரல், இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அறைந்த செயலாகும்.

சிறிலங்காவில் உண்மையான பொறுப்புக்கூறலை எதிர்பார்க்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகள், அரசாங்கத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக ஆராய வேண்டும்.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ள நியமனமானது, நடுநிலையான விசாரணை மற்றும், சட்டநடவடிக்கைகளுக்கு, ஒரு வலுவான அனைத்துலகப் பங்களிப்புடன் கூடிய சுதந்திரமான நீதிச் செயல்முறை ஒன்று சிறிலங்காவுக்குத் தேவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

கொடூரமான போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளாகியும், பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *