மேலும்

சிறிலங்காவுக்கு உதவ வந்தது அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் குழு

eagle-flag-usaமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள, சொத்துக்கள், நிதி தொடர்பான விசாரணைகளுக்கு உதவ, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்கா வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் இருந்து பில்லியன் கணக்கான ரூபா அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் நிலையில், நடந்த வாரம், அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளும், சட்டவாளர்களும், சிறிலங்காவுக்கு வந்து விசாரணைகளில் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்பதற்காக, சிறிலங்கா அதிகாரிகள் நடத்தும் விசாரணைகளுக்கு உதவும் நோக்கிலேயே இவர்கள் கொழும்பு வந்திருந்தனர்.

அமெரிக்காவின் எவ்பிஐ எனப்படும் சமஷ்டி விசாரணைப் பிரிவு, அமெரிக்க நீதித் திணைக்களம், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கப் பிரிவு, உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் அகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவே கடந்த வாரம் கொழும்பு வந்திருந்ததாக, சிறிலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுக்கள் மற்றும் விசாரணைகளில்,  சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும், தனிப்பட்ட திணைக்களங்களுக்கிடையில் தொடர்புகளை விருத்தி செய்தல் ஆகிய விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்புகளில் பிரதான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்காவில் கொள்ளையிடப்பட்ட  சொத்துக்கள் அமெரிக்காவில் பதுக்கப்பட்டிருந்தால் அவை மீண்டும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *