மேலும்

சிறிலங்காவில் விமானியில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சோதனை ஓட்டம்

சிறிலங்காவில் முதலாவது விமானியில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் குறித்த அதிகாரப்பூர்வ செயல்விளக்கப் பறப்பு இன்று  கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக,  மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு ஆகியோர் இந்த ட்ரோனில் பயணம் செய்து சோதித்துப் பார்த்தனர்.

இந்தச் செயல்விளக்கமானது, சிறிலங்காவில் மின்சாரத்தால் இயங்கும் பயணிகள் போக்குவரத்து ட்ரோன்களை அறிமுகப்படுத்துவதற்கான  நடவடிக்கையின் மற்றொரு  முக்கிய மைல்கல்லாகும்.

தரையிறங்கிய பிறகு தனது அனுபவம் குறித்துக் கருத்து வெளியிட்ட அமைச்சர் அனுர கருணாதிலக  ​​”நான் பறந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு இருந்தது” என்று தெரிவித்தார்.

ஊடகங்களிடம் பேசிய பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடிதுவக்கு, ட்ரோன்களைப் பயன்படுத்திய வணிக ரீதியிலான பயணிகள் போக்குவரத்து சேவைகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

சிறிலங்காவின்  உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவைச் சேர்ந்த பயணிகள் ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான ‘ஈ ஹாங்’ (eHang) பிரதிநிதிகளுக்கு இடையே கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் அவசர கால சேவைகளுக்காக மின்சாரத்தால் இயங்கும், செங்குத்தாக மேலே எழும்பி தரையிறங்கும் (eVTOL) விமானங்களை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஒரு சோதனை முயற்சியாகச் செயற்படுத்தப்படுகிறது. வணிக ரீதியிலான செயல்பாடுகள் தொடங்குவதற்கு முன்னதாக, கொழும்பு துறைமுக நகரத்தில் ஆறு மாத காலத்திற்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தச் சோதனைத் திட்டத்திற்காக, இருவர் பயணிக்கக்கூடிய ‘E216’ ரக பயணிகள் ட்ரோன் ஒன்று சமீபத்தில் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த ட்ரோனில் 16 சுழலிகள், 12 மின்கலத் தொகுப்புகள், மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த மையக் கணினி அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஆளில்லா விமானம், ஒரு மையக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து தொலைதூரத்தில் இருந்தபடி இயக்கப்படுகிறது.

அவசர காலங்கள் அல்லது தகவல் தொடர்பு துண்டிக்கப்படும் சூழல்களில் தானாகவே செயல்பட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வசதிகள் இதில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *