மாவீரர் நாளுக்கு தடையில்லை- புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது
போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களை நினைவுகூரத் தமிழர்களுக்கு உரிமை உள்ள போதும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எந்தவொரு செயலுக்கும், அந்த அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்படாது என, சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.
நவம்பர் 27-ஆம் நாள், ‘மாவீரர் நாள்’ நினைவு கூரப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.
போரின் போது உயிரிழந்த பெற்றோர்கள், பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்களை நினைவுகூருவதற்கோ அல்லது அவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவதற்கோ எந்தத் தடையும் இல்லை.
தமிழர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.
அதே வேளையில், சட்டத்தை மீறி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயல்பாடுகள் தடுக்கப்படும்.
சில அரசியல் குழுக்கள் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.
இனம் அல்லது மதம் எதுவாக இருந்தாலும், அனைவருக்கும் ஒரே சட்டமே பொருந்தும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
