அனோஜன் மீதான வழக்குகளை கைவிட்டது சவூதி அரேபியா- விடுதலையாகி நாடு திரும்புவார்
முகநூல் பதிவு ஒன்றின் காரணமாக, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிடுவதற்கு, சவூதி அரேபிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவின் பொது வழக்குத்தொடரும் பணியகம், நவம்பர் 9,ஆம் நாள், இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம், அனோஜன் மீதான எஞ்சிய சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன.
சவூதி அரேபிய அதிகாரிகளால் ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்பட்ட முகநூல் பதிவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக, அந்த நாட்டின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று, செப்ரெம்பர் 17ஆம் நாள் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
இராஜதந்திர மற்றும் பிற தலையீடுகளைத் தொடர்ந்து, ஒக்டோபர் 14,ஆம் நாள் சவூதி உயர் நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்தது.
இருப்பினும், ஏனைய தண்டனைகள் நடைமுறையில் இருந்ததால், அவரை முழுமையாக விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை சிறிலங்கா அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சவூதி பொது வழக்குத் தொடரும் பணியகத்தின் இந்தமுடிவானது, அவர் மீதான எஞ்சிய சட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன், அனோஜன் மீண்டும் சிறிலங்கா திரும்புவதற்கான வழியையும் ஏற்படுத்தியுள்ளது.
அனோஜனை மீண்டும் சிறிலங்கா அழைத்து வர அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், அவர் அடுத்த ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
