கொழும்பு துறைமுகத்திற்கு மீண்டும் வந்த அமெரிக்க போர்க்கப்பல்
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘யுஎஸ்எஸ் கன்பெரா’ (USS Canberra – LCS-30) என்ற போர்க் கப்பல், எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
127.6 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கடலோரப் போர்க்கப்பல் முன்னதாக, கடந்த ஜூன் 12 ஆம் நாள், கொழும்பு துறைமுகத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தது.
அமெரிக்க போர்க்கப்பலின் வருகை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்,
“இந்த வருகைகளைச் சுமூகமாகவும் திறம்படவும் மேற்கொள்வதற்கு சிறிலங்கா கடற்படை காட்டிய தொழில்முறை அணுகுமுறையையும் ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
இத்தகைய ஒவ்வொரு வருகையும், நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எங்களது கடற்படை கூட்டாண்மையின் வலிமையை மேலும் உறுதிப்படுத்துவதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் பேணுவதற்கான எங்களது கூட்டு அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
