காலியை நெருங்கிய மேலும் 6 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்- அமெரிக்கா கண்காணிப்பு
சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இயங்கி வந்த குறைந்தது ஆறு ஈரானிய எண்ணெய் கப்பல்கள், ஒக்டோபர் 23 ஆம் நாள் காலிக்கு அருகில், முன்னர் நங்கூரமிட்ட இடத்தை நோக்கித் திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘அணுசக்தி ஈரானுக்கு எதிரான ஐக்கியம்’ (UANI) என்ற அமைப்பு ஒக்டோபர் 23 ஆம் நாள் வெளியிட்ட கடல்சார் கண்காணிப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கிழக்கு நோக்கி நகர்ந்த ஈரானிய எண்ணெய் கப்பலான ஹெல்ம் (IMO 9357391), சிறிலங்காவின் தெற்கே உள்ள கடற்பரப்பில் காணப்பட்டது.
ஒக்டோபர் 13 நிலவரப்படி, சிறிலங்காவுக்கு அருகில் இருந்த 20 ஈரானிய எண்ணெய் கப்பல்களும் காலிக்கு அருகிலுள்ள தங்களின் முந்தைய நங்கூரமிடும் இடத்தை விட்டு வடக்கு நோக்கி நகர்ந்து விட்டதாக அணுசக்தி ஈரானுக்கு எதிரான ஐக்கியம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
எனவே, ஆறு கப்பல்கள் காலியை நோக்கித் திரும்பியிருப்பது அவற்றின் நிலைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
இருப்பினும், அந்த ஆறு கப்பல்களும் காலிக்கு அருகில் மீண்டும் நங்கூரமிட்டனவா அல்லது ஏன் தங்கள் பாதையை மாற்றிக் கொண்டன என்பது இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேபோன்று , சிறிலங்கா கடற்படை அல்லது அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் இந்த நகர்வுகள் தூண்டப்பட்டன என்பதைக் குறிக்கும் உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகள் எதுவும் வெளிவரவில்லை.
அணுசக்தி ஈரானுக்கு எதிரான ஐக்கியம் அமைப்பின் அண்மைய கண்காணிப்பின்படி, 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் உள்ளன.
