சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதியிடம் 6 மணிநேரம் விசாரணை
சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று 6 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மிக் விமானக் கொள்வனவு உடன்பாடு தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, சிறிலங்கா விமானப்படைக்காக மிக் போர் விமானங்களின் கொள்வனவு மற்றும் நிதி ஏற்பாடுகள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அழைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா நேற்றுக்காலை வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகியிருந்தார்.
சுமார் ஆறு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் பிற்பகலில் அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடமும், 11ஆம் நாள் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் விசாரிக்கப்பட்டிருந்தார்.
அதேவேளை, முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலகவும் அதே விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 10ஆம் நாள் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டிருந்தார்.
