மேலும்

மாகாண சபைத் தேர்தலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை

நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வரும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்துக்கு  இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 12ஆம் நாள் நாடு திரும்பிய அவர் இந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ரில்வின் சில்வா,

புதுடெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோருடனான சந்திப்பின் போது, அதிகாரப்பகிர்வு அல்லது பயங்கரவாத பிரச்சினைகள் பற்றி எதுவும்  கலந்துரையாடப்படவில்லை.

இந்தியாவின் கவனம், அரசியல் நிகழ்ச்சி நிரலில் இல்லை, அது  முழுக்க முழுக்க பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பத்திலேயே கவனம் செலுத்துகிறது.

இந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு  உண்மையான மற்றும் நம்பகமான பங்காளியாக இருக்கும் என்று எமக்கு மீண்டும் கூறியது.

இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சியின் போது,  ஜேவிபி இந்தியாவுக்கு எதிராக செயற்படவில்லை, அப்போதைய இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கே பதிலளித்தது.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்திய-சிறிலங்கா உறவுகள் மாறிவிட்டன. நாங்கள் ஒன்றாக வேலை செய்ய முடியும் என்பதை இந்தியா உணர்ந்துள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழித்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாத அதிபர் பதவியை உருவாக்குதல் ஆகியன குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் ரில்வின் சில்வா இதன் போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *