7 ஆயிரம் பேருக்கு சிகிச்சையளித்த இந்திய இராணுவ மருத்துவக் குழு புறப்பட்டது
டிட்வா புயலை அடுத்து ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழுவினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
பேரிடரை அடுத்து, சாகர் பந்து நடவடிக்கையின் கீழ், இந்திய இராணுவத்தின் சத்ருஜீத் படைப்பிரிவின் அதிரடிப்படைப்பிரிவைச் சேர்ந்த, 78 பேர் கொண்ட குழுவுடன், முழு அளவிலான கள மருத்துவமனை, கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி சிறிலங்காவிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.
இந்த கள மருத்துவமனை கண்டிக்கு அருகிலுள்ள மகியங்கனை பகுதியில் அமைக்கப்பட்டது.
இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண முயற்சிகளின் முக்கிய அங்கமான இந்த பணியின் போது, அறுவை சிகிச்சைகள் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான உயிர்காக்கும் மருத்துவப் பராமரிப்பை வழங்கியுள்ளது.
தினமும் சுமார் 1,000 முதல் 1,200 நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனை மூலம் சேவை வழங்கப்பட்டுள்ளது.
இங்கிருந்த காலப்பகுதியில், 7,176 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், 513 சிறிய மற்றும் 14 பெரிய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த கள மருத்துவமனை மகியங்கனையில் தனது செயற்பாடுகளை முடித்துக் கொண்டு, மருத்துவக் குழு நேற்று கொழும்பிலிருந்து இந்திய விமானப்படை சி 17 குளோப்மாஸ்டர் விமானத்தில் இந்தியா திரும்பியது.
இந்த விமானத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி, 10 தொன் அத்தியாவசிய மருந்துகளும், 15 தொன் உலர் உணவுப் பொருட்களும் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்திய மருத்துவக் குழுவை வழியனுப்பும் நிகழ்வு பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த போது, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்து கொண்டதுடன் சரியான நேரத்தில் இந்தியாவின் ஆதரவுக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.

