கேப்பாப்புலவில் விமானப்படையின் தூண்கள் இடித்து அகற்றப்பட்டன
முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, புலவு குடியிருப்பு நுழைவாயிலில் சிறிலங்கா விமானப்படை அமைத்திருந்த இரண்டு பாரிய, கொங்கிரீட் தூண்கள், இடித்து அகற்றப்பட்டுள்ளன.
மக்கள் நடமாட்டத்திற்கு இடையூறாக இருப்பதாக அந்தப் பகுதி மக்கள், அளித்த முறைப்பாட்டை அடுத்து, உள்ளூர் அதிகாரிகள், கடந்த வாரம் இந்த தூண்களை அகற்றியுள்ளனர்.
விமானப்படை ஆக்கிரமிப்பின் போது நிறுவப்பட்ட தூண்கள், வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கிராமவாசிகள் தெரிவித்ததை அடுத்து, கரைத்துறைப்பற்று பிரதேச சபை கடந்த 30 ஆம் திகதி அந்தக் கட்டமைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த தூண்கள் அகற்றப்பட்டுள்ளன.
எனினும், கேப்பாபுலவு விமானப்படைத் தளம் உட்பட அதனைச் சுற்றியுள்ள பெருமளவு நிலங்கள் சிறிலங்கா விமானப்படையினரால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால், போர் முடிந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்தப் பகுதி மக்கள் மீளக் குடியேற முடியாத நிலை நீடிக்கிறது.


