செம்மணிப் புதைகுழி தளத்தில் வெள்ளம்- 3 மாதங்களுக்கு பின்னரே அகழ்வு
செம்மணி மனிதப் புதைகுழித் தளத்தில் மூன்றாவது கட்ட அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழி அகழ்வுத் தளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அகழ்வுப் பணிகளை அடுத்த ஆண்டு வரை தற்காலிகமாக பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் எஸ். லெனின் குமார், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், மனித உரிமைகள் சட்டவாளர்களான நிரஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழு, செம்மணி புதைகுழித் தளத்தை பார்வையிட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி மீண்டும் புதைகுழி அகழ்வுத் தளத்தை பார்வையிட்டு நிலைமைகளை மறுபரிசீலனை செய்து, அகழ்வுப் பணிகள் பாதுகாப்பாக மீண்டும் தொடங்க முடியுமா என்பதைத் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழியில், இரண்டு கட்ட அகழ்வுகளின் போது 240 மனித எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், 239 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
அதையடுத்து, நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதங்களால் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் செப்ரெம்பர் மாதம் இடைநிறுத்தப்பட்டது.
