மேலும்

சிறிலங்காவுடன் ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலியுறுத்தினார் சீன அதிபர்

சீன அதிபர் ஷி ஜின்பிங்  நேற்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து, பேச்சு நடத்தியுள்ளார்.

இதன் போது அவர், இரு நாடுகளுக்கும் இடையே சட்ட அடுலாக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவுடன் உயர்மட்ட பாதை மற்றும் அணை ஒத்துழைப்பை கூட்டாக ஊக்குவிக்கவும், துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாகவும் சீன அதிபர், குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை சீனாவிற்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா பிரதமர் நேற்று முன்தினம் சீன பிரதமர் லீ கியாங்கை சந்தித்த நிலையில் நேற்று சீன அதிபரைச் சந்தித்திருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், எல்லை தாண்டிய சூதாட்டம், மோசடி மற்றும் பிற குற்றச் செயல்களை உறுதியாகக் கட்டுப்படுத்தவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்ததாக, சீனாவின்  சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்போது, பாதை மற்றும் அணை ஒத்துழைப்பை சிறிலங்கா தீவிரமாக ஆதரித்து பங்கேற்பதாக  கூறிய ஹரிணி அமரசூரிய,  சிறிலங்காவின்  வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சீனாவுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புவதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

சீனத் தலைவர்களுடனான சிறிலங்கா பிரதமரின் பேச்சுவார்த்தைகளில், சிறிலங்கா துறைமுகங்களுக்கு வருகை தரும் உளவு கப்பல்களாகக் கருதப்படும் சீனாவின் சர்ச்சைக்குரிய ஆராய்ச்சிக் கப்பல்கள் குறித்த எந்த விடயமும் கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *