மேலும்

தாஜுதீன் கொலையை மூடிமறைத்தவர்களும் தற்போதைய அரசாங்கத்தில்

2012 ஆம் ஆண்டில் நடந்த வாசிம் தாஜுதீன் கொலையை மூடிமறைப்பதில் ஈடுபட்ட சிலர், தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மித்தெனியவில் தனது இரண்டு குழந்தைகளுடன் கொல்லப்பட்ட அனுர விதானகமகே அல்லது கஜ்ஜா, தாஜுதீன் கொலையில் தொடர்புபட்டிருந்தவர் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்  முஜிபூர் ரஹ்மான்,

கடந்த ஆண்டு அதிபர் மற்றும் நாடா ளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகள் மற்றும் வாசிம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலைகளுக்கு காரணமானவர்களைக் கைது செய்வதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அதிபர் அனுரகுமார  திசாநாயக்க மற்றும் ஏனைய மூத்த பேச்சாளர்கள் அதையே மீண்டும் கூறினர், ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தடுத்தார்.

எதிர்க்கட்சியினால் அரசாங்கம் தோற்கடிக்கப்படும் என்பதற்காக அவர் இதனைச் செய்யவில்லை, முழு நாடாளுமன்றக் குழுவும் அம்பலப்படுத்தப்படும் என்ற அச்சத்தினாலேயே அது தடுக்கப்பட்டது.

சபாநாயகர் வெட்கமின்றி தேசிய மக்கள் கட்சியின் அரசியல் மூலோபாயத்தை அம்பலப்படுத்தினார்.

முந்தைய அரசாங்கங்களின் நலன்களுக்கு சேவை செய்த பலர் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்றனர்.

எனவே, அரசாங்கம் முழு மூச்சாகச் செல்லும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்க முடியாது.

சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்ட பெக்கோ சமன், கஜ்ஜாவைக் கொல்ல உத்தரவிட்டதாக நம்பப்படுகிறது.

முந்தைய நிர்வாகங்களின் போது செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தவர்கள், பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறையில் முக்கிய பதவிகளை வகிக்கும் வரை – தேசிய மக்கள் கட்சியின் அரசியல் மூலோபாயத்திலிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *