காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டிற்கு புதிய முறை
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு புதிய முறையை சிறிலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், ஹர்ஷண நாணயக்கார, தெரிவித்துள்ளார்.
செப்ரெம்பர் 26 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா குழுவின் 29வது அமர்வில், சிறிலங்கா குறித்த மீளாய்வு இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம், காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காக இழப்பீடு வழங்கும் முறைக்கு அப்பால் செல்வதாக இருக்கும்.
இதுவரை ஏற்பட்ட தாமதங்களைத் தவிர்த்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.
புதிய அமைப்பு நீண்டகால ஆதரவை வழங்குவதோடு, நியாயமான நிதி இழப்பீடு, தொழிற்கல்வி, வாழ்வாதார வாய்ப்புகள், சுகாதார வசதிகள், உளவியல் சமூக பராமரிப்பு மற்றும் சமூக கண்ணியத்தை மீட்டெடுப்பது உள்ளிட்ட ஒருங்கிணைந்த அமைப்பை செயல்படுத்துவதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.