இலங்கை தேயிலைக்கு நோபல் பரிசா? – வாங்கிக் கட்டிய அமைச்சர்
கின்னஸ் உலக சாதனையை ‘நோபல் பரிசு’ என்று தவறாகக் குறிப்பிட்டு விட்டதாக, சிறிலங்காவின் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, முகநூலில் ஒப்புக்கொண்டுள்ளார்.
விதானகண்டே இலங்கை கறுப்புத் தேயிலை (Vithanakande Ceylon Black Tea) ஜப்பானில் நடந்த ஏலத்தில் இதுவரை விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த தேயிலை என்ற, கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட புதிய விதானகண்டே சிலோன் பிளாக் டீ குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கருத்து தெரிவித்திருந்தார்.
அதில் சிறிலங்கா தேயிலைக்கு ஜப்பானில் நோபல் பரிசு கிடைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இது சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், இந்த தவறுக்கு அமைச்சர் ஹந்துன்னெத்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தூண்டிவிடப்பட்ட வங்குரோத்து விவாதம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.