மேலும்

கடும் தண்டனைகளுடன் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின்  கீழ், இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை  மாற்றும் வகையில்,  ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் -இலக்கம்-2026’ என்ற புதிய சட்ட வரைவு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டவரைவு, “வேண்டுமென்றோ அல்லது தெரிந்தோ, பயங்கரவாத நிலையைத் தூண்டும் எந்தவொரு செயலையும் செய்பவர்; பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் எந்தவொரு பிரிவையோ அச்சுறுத்துபவர்; சிறிலங்கா அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச அமைப்பையோ எந்தவொரு செயலையும் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ கட்டாயப்படுத்துபவர்; அல்லது போரை பரப்புபவர், அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுபவர், அல்லது சிறிலங்கா அல்லது வேறு எந்த இறையாண்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை மீறுபவர், பயங்கரவாதக் குற்றத்தைச் செய்பவராக வரையறுக்கிறது.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாகவோ, பயங்கரவாத வெளியீடுகளை ஊக்குவிப்பதற்காகவோ அல்லது பரப்புவதற்காகவோ அல்லது பயிற்சி அளித்ததற்காகவோ குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

சந்தேக நபர்களை ‘நியாயமான சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிடவும்’, சந்தேக நபர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்யவும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு அதிகாரம் உள்ளது என்று, அந்த  64 பக்க சட்டவரைவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டவுடன்,  கைது குறித்து 24 மணி நேரத்திற்குள் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், காவல்துறை மா அதிபருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.

காவல்துறை மா அதிபர் அல்லது  பிரதி காவல்துறை மா அதிபர்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து இரண்டு மாதங்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவும்  இந்த சட்டவரைவு வழிவகுக்கிறது.

கைது செய்யப்பட்டதிலிருந்து ஓராண்டு வரை, தடுப்புக்காவல் உத்தரவை  புதுப்பிக்க முடியும் என்றும் இந்த சட்டவரைவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *