அவசரமாக கூடும் நாடாளுமன்றில் 1000 பில்லியன் ரூபாவுக்கு குறைநிரப்பு பிரேரணை
வரும் 18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தில், அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.
டிட்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதிக்கு ஒப்புதல் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் கீழ், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டியுள்ளார்.
இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
எனினும், நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் அவசர பழுதுபார்ப்பு பணி செலவுகள் குறித்த புதிய மதிப்பீடுகள் கணக்கிடப்பட்ட பின்னர், இந்தத் தொகை இரட்டிப்பாகியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறைநிரப்பு பிரேரணை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 19 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும்.
அதன் பின்னர் சபை ஜனவரி 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சிறிலங்கா அதிபர் நாளை பேரிடர் முகாமைத்துவத்திற்கான சிறப்பு தேசிய சபைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க பேரிடர் முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்த சபை நிறுவப்பட்ட போதும், அது பெரும்பாலும் செயல்படாமல் உள்ளது.
இந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் தேவை என்றும், இது சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
