மேலும்

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு- சோபா உடன்பாட்டின் முன்னோடியா?

வரிகளைக் குறைப்பதற்கான நிபந்தனையாகவும், சோபா ( SOFA) எனப்படும் படைகளை நிலைப்படுத்தும் உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கான முன்னோடியாகவும்,  சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தத்தை மேற்கொண்டதா என்று  சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கலாநிதி வீரசிங்க இதுகுறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் காலததில், சோபா உடன்பாட்டை இறுதி செய்வதில் அமெரிக்கா கிட்டத்தட்ட வெற்றி பெற்றது.

அரச கூட்டுத் திட்டத்தின் (SPP) கீழ் அமெரிக்க தேசிய காவல்படையுடன் ஒரு புதிய இராணுவ புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கும் மொன்டானா தேசிய காவல்படைக்கும் இடையிலான இந்த உடன்பாடு, ‘இந்தோ-பசுபிக்’ இராணுவமயமாக்கலிலும் சிறிலங்காவின் இறையாண்மையை அரிப்பதற்குமான  மற்றொரு நடவடிக்கையாகும்.

புதிய அமெரிக்க- சிறிலங்கா புரிந்துணர்வு உடன்பாடு, கூட்டுப் பயிற்சி, கடல்சார் கண்காணிப்பு, வான் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க தேசிய காவல்படைக்கும் சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கும் இடையிலான பேரிடர்-பதில் ஒருங்கிணைப்பு போன்ற பரந்த அளவிலான இராணுவ நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை முறைப்படுத்துகிறது.

இந்த உடன்பாடு சிறிலங்காவுக்குள் அமெரிக்க இராணுவ கட்டமைப்புகளை உள்நுழைப்பதற்கான ஒரு சாட்டாக கருதப்பட வேண்டும்.

வெனிசுலாவுக்கு எதிரான வொஷிங்டனின் வெளிப்படையான ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையில் உடந்தையாக இருப்பது உள்ளிட்ட அமெரிக்க இராணுவவாதம் அதிகரித்துள்ள சூழலில், இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியா-சிறிலங்கா பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் எட்டப்பட்ட இரண்டாவது இராணுவ உடன்பாடு இதுவாகும்.

இதன் உள்ளடக்கங்கள் பொதுமக்களிடமிருந்து முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இலங்கையரும் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள் உள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது வரிகளைக் குறைப்பதற்கான ஒரு அரசியல் நிபந்தனையா?

இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு அமெரிக்காவுடன் படைகளை நிலைப்படுத்தும் உடன்பாட்டில்  கையெழுத்திடுவதற்கான முன்னோடியா?

சிறிலங்காவின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உள்கட்டமைப்பு வசதிகள்,  துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவை அமெரிக்க போர் இயந்திரத்தின் வசம் ஒப்படைக்கப்படுமா?

ஆசியாவில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பில் சிறிலங்கா ஒரு பகடைக்காயாக இருக்க வேண்டுமா?

சிறிலங்கா ஒரு அணிசேரா, இறையாண்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் செய்துள்ள அனைத்து இராணுவ உடன்பாடுகளின் உள்ளடக்கத்தையும் உடனடியாக வெளியிடவும், வெளிநாட்டு சக்திகளுடன் மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை நிறுத்தவும், தேசிய பாதுகாப்பு முடிவுகளை ஜனநாயக ஆய்வுக்கு உட்படுத்தவும் அழைப்பு விடுக்கிறோம்.

மேலும், நாட்டின் அணிசேரா நிலை மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் தேசபக்தி சக்திகளும் முன்வர வேண்டும் என்று அழைக்கிறோம் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *