புதுடெல்லியில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் சந்திப்பு
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஏழாவது கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்தியா, மாலைதீவுகள், மொறிஷியஸ், பங்களாதேஷ் மற்றும் சிறிலங்கா ஆகிய உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சீஷெல்ஸ் பார்வையாளர் நாடாக பங்கேற்கும், அதே நேரத்தில் மலேசியா விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.
பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்களில் உறுப்பு நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என, இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தொலைநோக்கு மற்றும் குறிக்கோளுக்கு இணங்க, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு; பயங்கரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலை எதிர்த்தல்; நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல்; சைபர் பாதுகாப்பு மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பின் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட ஒத்துழைப்பின் பல்வேறு தூண்களின் கீழ் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வதற்கும், அடுத்த ஆண்டுக்கான வழிகாட்டுதல் மற்றும் செயல் திட்டத்தைப் பற்றி விவாதிப்பதற்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஏழாவது கூட்டம் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
