இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து பேச்சு
இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சு நடத்தியுள்ளன.
மும்பையில் நடைபெறும், 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வார நிகழ்வில் கலந்து கொண்டுள்ள இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், மற்றும், சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோருக்கு இடையில் நேற்று இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய பாதையைத் தொடங்குவதன் மூலம், இந்தியா-சிறிலங்கா கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே தற்போதுள்ள பாதையுடன் சேர்த்து, இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய படகுப் பாதையை அமைப்பதற்கான சாத்தியங்களை இந்தியா ஆராய்ந்து வருகிறது என்று இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

