மேலும்

சிறிலங்காவில் புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஆரம்பித்து வைப்பு – காலை வாரிய சஜித்

சிறிலங்காவில் பல முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, மகா ஜன ஹண்ட (மக்களின் குரல்) என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணி நேற்று  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் சிறிலங்கா பொதுஜன பெரமுன ,  சிறிலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி , பிவிதுரு ஹெல உறுமய , மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி , சிறிலங்கா மகாஜன கட்சி மற்றும் நவ ஜனதா பெரமுன ஆகியன இடம்பெற்றுள்ளன.

அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒரு பாரிய பேரணியை இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதன் பின்னர் நாடு முழுவதும் தொடர் பேரணிகள் நடத்தப்படும் என்றும்  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில்  உரையாற்றிய பொதுஜன பெரமுனவின்  பொதுச்செயலாளர், சாகர காரியவசம், கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கொள்கை  வேறுபாடுகள் இருந்தபோதிலும் – ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க ஒன்றுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய அரசாங்கத்தால் மக்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் கடுமையான அழுத்தத்தில் உள்ளனர்.”

அவர்கள் தங்கள் கட்சிக்கு நெருக்கமானவர்களை காவல்துறை போன்ற நிறுவனங்களில் நியமிப்பதன் மூலம் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்துகிறார்கள்.

பெலவத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியை குற்றப் புலனாய்வுத் துறையிலும் நியமிக்கிறார்கள்.

இந்த அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை அழிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை உடைத்து விட்டது.

எனவே, மக்களின் வாழ்க்கை உரிமையை உறுதி செய்வதற்காக இந்த பேரணியை ஏற்பாடு செய்கிறோம்.என்றும் அவர் கூறினார்.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லருக்கு எதிராக ஒன்றிணைந்த நட்பு சக்திகளின் ஒற்றுமையை இந்த இயக்கம் பிரதிபலிக்கும் என்றும், ஒரு பரந்த அரசாங்க எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவதாக உறுதியளிப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தி  பங்கேற்கும் எனக் கூறப்பட்ட போதும் அந்தக் கட்சி இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

தமது கட்சி  எதிர்க்கட்சி கூட்டணியில் சேராது என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *