86 ஏக்கர் தனியார் காணிகளே விடுவிப்பு – ஒப்புக் கொண்டது அரசாங்கம்
இந்த ஆண்டில் சிறிலங்கா படையினரின் வசம் இருந்த 86 ஏக்கர் தனியார் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன என்பதை சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளித்துப் பேசிய சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.
இதன்படி, 2025ஆம் ஆண்டில் இதுவரையில், வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினரின் வசம் இருந்த 700 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில், இந்த ஆண்டு இதுவரை, 672.24 ஏக்கர் காணிகள் அரச படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.
அவற்றில், 86.24 ஏக்கர் காணிகள் தனியார் காணிகள் என்றும், 586 ஏக்கர் அரச காணிகளாகும்.
கிழக்கில் 34.58 ஏக்கர் அரச காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
வவுனியாவில் ஈச்சங்குளம் காணிகளை விடுவிப்பது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகிறது. அவை விரைவில் விடுவிக்கப்படும்.
காணிகள் விடுவிப்பு தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையிலும், தேசிய பாதுகாப்புக்கான துறைசார் ஆலோசனைக் குழுவிலும் அனுமதி பெறப்பட்டுள்ளன என்றும் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
