ஜெனிவா தீர்மானம் குறித்த விவாதம் நவம்பர் 4இல் நடக்காது
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, விரைவில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவதற்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தாலும், அன்றைய தினம் வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் நாட்டிற்கு வருகை தருவதாலும், இரு நாடுகளுக்கும் இடையே பல இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாலும், இந்த விவாதத்திற்கு வேறு திகதியை நிர்ணயிக்கப்படும்.
வெளிவிவகார அமைச்சின் குழு நிலை விவாதத்தின் போது தொடர்புடைய விவாதத்திற்கான நேரத்தை இரண்டு மணி நேரம் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இல்லையேல் நாடாளுமன்ற விவகாரக் குழுவில் கலந்துரையாடிய பின்னர் விவாதத்திற்கு வேறு திகதியை நிர்ணயிக்கலாம் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவகாரக் குழுவில் கலந்துரையாடி, திகதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கூறினார்.