அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்கத் தயார் – சிறிலங்கா அரசு அறிவிப்பு
பரஸ்பர வரிகளைக் குறைப்பதற்காக, அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து சிறிலங்கா பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் மாதாந்த எண்ணெய் செலவு 300 – 400 மில்லியன் டொலர்கள் என்றும், அதை விடக் குறைந்த செலவில் இறக்குமதி செய்யக் கூடியதாக இருந்தால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வது குறித்துப் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் எரிபொருள் வர்த்தகத்தில் அரசு நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை என்பதால், அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்பாட்டின் கீழ் எண்ணெய் கொள்முதல் செய்வதில் சிக்கல் உள்ளதாகவும், பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து நாம் கலந்துரையாடலாம்.
தற்போது அமெரிக்காவிலிருந்து நாங்கள் எண்ணெயை இறக்குமதி செய்வதில்லை. ஆனால், செலவு என்பது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயம்.
இந்த குறிப்பிட்ட பிரச்சினையை நிவர்த்தி செய்யும் போது, தற்போதைய விலைக்கு ஒத்த விலையில் அவற்றை வாங்க முடியும்.
அந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட்டால், அதைச் செய்யலாம். ஆரம்பத்தில், இதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கத்திடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்ய விரும்பினால், எங்களிடம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உள்ளது.
ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை, எண்ணெயை விற்க அத்தகைய அரசு நிறுவனம் எதுவும் இல்லை. தனியார் நிறுவனங்களே அதில் ஈடுபடுகின்றன.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் WTI மசகு எண்ணெயின் மாதிரியை சோதனைக்காக கோரியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா 180,000 தொன் மசகு எண்ணெயையும் கிட்டத்தட்ட 200,000 தொன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்களையும் இறக்குமதி செய்கிறது.
அமெரிக்காவிலிருந்து எரிபொருள்களை பெற்றுக் கொள்ள, கிட்டத்தட்ட 21 நாட்கள் ஆகும்.
இருப்பினும், எரிபொருள் விநியோகத்திற்கான கேள்விபத்திர செயற்பாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் பங்கேற்கத் தயாராக இருப்பதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.