பிள்ளையானுடன் பேச ரணிலுக்கு தடை – கம்மன்பிலவுக்கு அனுமதி.
குற்றப் புலனாய்வுத்துறையின் தடுப்புக்காவலில் உள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுடன் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானுடன் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில், குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் அனுமதி கோரியதாகவும், காவலில் உள்ள சந்தேகநபரை, தொலைபேசியில் தொடர்பு கொள்வது சட்டவிரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரே, குற்றப் புலனாய்வு அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதற்கான கோரிக்கையை விடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான, உதய கம்மன்பிலவுக்கு, பிள்ளையானைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிள்ளையானின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் கம்மன்பில இந்த சந்திப்பைக் கோரியிருந்தார் என்றும், குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முன்னிலையில் அவர் பிள்ளையானுடன் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான், கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.