மேலும்

அரசியல் வாழ்வை கெடுக்க முயற்சி – மகாநாயக்கர்களிடம் முறையிட்ட சம்பிக்க

தனது அரசியல் வாழ்க்கையை கெடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்படுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடம் சம்பிக்க ரணவக்க முறையிட்டுள்ளார்.

நேற்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரரையும், அஸ்கிரிய பீடடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புர சிறி விமலதர்ம தேரரையும், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சந்தித்தார்.

இதன் போது தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் சூழ்ச்சி தொடர்பாக முறையிட்டுள்ளார்.

சந்திப்புகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பிக்க ரணவக்க,

“தொடர்ச்சியான ஊடகப் பரப்புரையின் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சிகள் நடப்பது  குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு தெரிவித்தேன்.

அரசாங்கம் எனக்கு எதிரான ஆதாரங்களைத் தயாரித்து என்னைக் கைது செய்யலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு விபத்து பற்றி அவர்கள் பேசுகிறார்கள். எனது வாகனம் ஒரு இளைஞன் மீது மோதியதாக  அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அதிவேகத்தில் பயணித்த அந்த வாகனம், மெதுவாக நகர்ந்த வாகனத்துடன் மோதியது.

அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையைப் பார்த்த பின்னர், சாரதிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் அவரை விடுவித்தது.இந்த வழக்கை மீண்டும் கொண்டு வர எந்த காரணமும் இல்லை.

அரசாங்கம் எனது சாரதியை பயமுறுத்த முயற்சிக்கிறது, என்னைக் கைது செய்யும் முயற்சியில் அவரது குடும்பத்தினரைத் துன்புறுத்துகிறது.

விசாரணையை நான் பொருட்படுத்தவில்லை, ஆனால் அது சரியாக செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

அதேவேளை மகாநாயக்கர்களைச் சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்ததை அடுத்தே, சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *