மேலும்

பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது – ஓமல்பே சோபித தேரர்

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் தக்ஷிண லங்கா பிரதம சங்க நாயக்கர் வண. ஓமல்பே சோபித தேரர்.

கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர்,

‘கோத்தாபய, மகிந்த, சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில  ஆகியோர் ஒரே சித்தாந்தத்தைப் பகிர்ந்து கொண்ட சகோதரர்கள் என்பதால், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான  திட்டமிடலைச் செய்வதற்காக அவர்கள் ஒன்றுபட வேண்டும்.

சிங்கள பௌத்த இயக்கத்தின் விளைவாகவே கோத்தாபய ராஜபக்க நாட்டின் அதிபரானார்.

இத்தகைய பின்னணியில், அரசியல் பழிவாங்கல், தனிப்பட்ட விரோதம், தோல்வியடைந்த கட்சிகளை அடக்குதல் ஆகிய செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2005, 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தவர்களுக்கும் இதே  மாதிரியான ஆலோசனைகளை கூறினோம்.

எனினும், இவ்வாறு நடந்து கொண்ட முந்தைய அரசாங்கங்களின் நிலை குறித்து மீண்டும் கூறத் தேவையில்லை.

ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் நடத்தப்பட்ட முறையை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் – சட்ட அடிப்படையில் இல்லாமல் பழிவாங்கும் நோக்கங்களின் அடிப்படையில், எடுக்கப்பட்டுள்ளன.

ஏதேனும் சிக்கல் இருந்தால், நியாயமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *