மேலும்

அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறிலங்கா அதிபர்

தேசியப் பிரச்சினைக்கு எந்தவொரு சூழலிலும், சமஷ்டித் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“செயற்படுத்த முடியாத தீர்வுகளுக்கு நேரத்தை வீணடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

அனைத்து சமூகங்களும் கண்ணியத்துடன் வாழ விரும்புகின்றன, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மூலம் அனைத்து சமூகங்களும் சமாதானத்தை அனுபவிக்கக் கூடிய சூழலை உருவாக்குவதே எனது நோக்கம்.

அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிப்பதன் மூலம் நிலைமையை இயல்பு நிலைமைக்கு கொண்டு வரமுடியாது.

தமிழ், முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் தான் அதிபர். எனவே நாட்டை முன்னேற்ற தமிழ், முஸ்லிம் மக்கள் அரசுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தமிழ் கட்சிகள் வாய்ப்பளிக்கவில்லை. முஸ்லிம் கட்சிகளும் அவ்வாறே செய்தன. எனினும் சிங்கள மக்கள் தனித்து வாக்களித்தனர்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு  தேசிய பாதுகாப்பு முக்கியமானது. அதேபோல அபிவிருத்தி மூலமும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தேசிய ஒற்றுமையை அபிவிருத்தி மூலம் தான் உருவாக்கலாம் என்பதே எமது நிலைப்பாடு. தொழிற்கல்வி, கைத்தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி இவற்றுக்கு தீர்வு காணமுடியும்.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். அது தருவேன்,இது தருவேன் எனக் கூறப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.  முடியாத விடயங்களையெல்லாம் கூறி, மக்களை ஏமாற்றியுள்ளனர்.

சாதாரண மக்களுக்கு அதிகாரப் பகிர்வு பற்றிய எந்த எண்ணமும் கிடையாது. அவர்கள் அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றனர்.

இதுவரை ஆட்சிபுரிந்த அனைத்து அரசாங்கங்களும் அரசியல் இலாபம் கருதியே அதிகார பகிர்வு தொடர்பாக பேசினர்.

அனைத்து மக்களும் கௌரவமாக வாழவேண்டுமாயின் அவர்களுக்கான தொழில், பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் சிறந்த சுகாதார வசதிகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

அதிகாரப் பகிர்வை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தினை ஏற்படுத்த வேண்டியதே மக்களின் தேவையாகும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *