மேலும்

தேர்தலுக்கு முன்னர் எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திட தடை விதித்தார் சிறிசேன

எதிர்வரும் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன், கொடை உடன்பாடு கைச்சாத்திடப்படமாட்டாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர், நேற்று அவசரமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் எம்சிசி உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறும் அவர், மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தனர்.

இதையடுத்து, தமக்கு முன்பாகவே, நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிறிலங்கா அதிபர், அதுகுறித்த விபரங்களை கேட்டறிந்தார் என்றும், அந்த உரையாடலில் இருந்து அது அவசரமாக கையொப்பமிடப்படாது என்பதை தாங்கள் புரிந்து கொண்டோம் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நொவம்பர் 16ஆம் நாளுக்கு முன்னதாக, இந்த உடன்பாடு கையெழுத்திடப்படாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, அமைச்சரவையில் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் சிறிலங்கா அதிபர் தம்மிடம் கூறியதாக விமல் வீரவன்ச  கூறினார்.

அதேவேளை, அதிபர் தேர்தலுக்கு எம்சிசி உடன்பாடு கைச்சாத்திடப்படும் என்று நேற்றுமுன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *