மேலும்

தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக டிலானிடம் கெஞ்சும் மைத்திரி

சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து அடுத்த மாதம் நீங்கிய பின்னர், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான முயற்சிகளில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் என்று ‘சண்டே ரைம்ஸ்’ அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

‘ஜப்பானிய பேரரசரின் முடிசூட்டு விழாவுக்காக டோக்கியோவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளார்.

நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக ஜப்பான் சென்றிருந்த அவர், அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். மூன்று நாட்கள் தனிப்பட்ட பயணமாக அங்கு தங்கியிருந்த மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு திரும்பவுள்ளார்.

அவர் ஜப்பானுக்கு செல்வதற்கு முன்னதாக, அதிபர் பதவியில் இருந்து நீங்கியதும் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்திருந்தார்.

இதற்காக, சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து கொண்டதால், ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளும் , நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுடன் அவர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.

முன்னதாக, டிலான் பெரேராவும், ஏனைய மூவரும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில், பொதுஜன பெரமுன தலைவர்கள் தம்மை ஓரம்கட்டுவதாக அவர்கள் சிறிசேனவிடம் புலம்பியிருந்தனர்.

டிலான் பெரேராவும், ஏனைய மூவரும் சுதந்திரக் கட்சியில் ஒழுக்காற்று  நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு பொதுஜன பெரமுனவில் உயர் பதவிகளை வழங்க வேண்டாம் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர, அந்தக் கட்சியின் தலைவர்களிடம் கோரியிருந்தார்.

ஜப்பான் செல்வதற்கு முன்னர், டிலான் பெரேராவுடன் இரண்டு மணிநேரம் பேச்சு நடத்திய சிறிலங்கா அதிபர், அவரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறும், தான் அந்த இடத்துக்கு நாடாளுமன்றம் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

அதற்குப் பதிலாக அவரை ஊவா மாகாண ஆளுநராக நியமிப்பதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

பின்னர், சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான தகவல்களை மகிந்த ராஜபக்சவுக்குத் தெரியப்படுத்தினார் டிலான் பெரேரா.

அதற்கு அவர், தமது புதிய தலைவருடன் அதாவது கோத்தாபய ராஜபக்சவுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவிடம் கூறுமாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஊவா மாகாண ஆளுநர் பதவிக்கு சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்றன.

இந்தநிலையில், டிலான் பெரேராவை ஊவா ஆளுநராக நியமிப்பதற்கு வழி வகுக்கும் நோக்கில், ஆளுநராக உள்ள மைத்ரி குணரத்னவையும் சிறிலங்கா அதிபர் சந்தித்திருந்தார்.

இதன்போது, தாம் தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்துக்கு செல்வதற்காக டிலான் பெரேராவை, பதவி விலகி, இடமளிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலில் நீடிப்பதற்கேற்ற வகையில், தாம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், நாட்டிற்கு “சேவை செய்ய” விரும்புவதாகவும் அவர் ஊவா ஆளுநரிடம் விளக்கியுள்ளார்.

எனினும், தான் இந்த விடயத்தை கவனமாக பரிசீலித்ததாகவும்,   ஆளுநர் பதவியில் இருந்து பதவி விலகப் போவதில்லை என்றும் சண்டே ரைம்சிடம் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *