மேலும்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரம் – ஒருவர் பலி

சிறிலங்காவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெட்டுக்காயங்களுடன் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 42 வயதுடைய முஸ்லிம் ஒருவரே மரணமானார் என மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் நேற்று முன்திம் தொடக்கம் முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டத்தையும் மீறி பெருமளவு குண்டர்கள், முஸ்லிம்களைத் தாக்குவதிலும் அவர்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துவதிலும் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த வன்முறைகளின் போது கினியாம உள்ளிட்ட பகுதிகளில் 3 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன. நேற்று மினுவாங்கொடவில் ஒரு பள்ளிவாசல் தாக்கி சேதப்படுத்தப்பட்டது. மேலும் பல இடங்களில் பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

இதையடுத்தே, கம்பகா மாவட்டத்தில் நேற்று மாலை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது, இன்று காலை 6 மணியுடன் இந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வடமேல் மாகாணத்தில் உள்ள குருநாகல, புத்தளம் மாவட்டங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதிலும் பதறற்றத்தை தணிப்பதிலும் முப்படையினரும், காவல்துறையினரும் தடுமாறுகின்றனர்.

அங்கு ஊரடங்கு நேரத்திலும் குண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

“நூற்றுக்கணக்கான குண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இாணுவத்தினரும் காவல்துறையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிலையங்களை தாக்கி எரித்துக் கொண்டிருக்கின்றனர்“ என்று கொட்டாம்பிட்டிய பகுகுதியைச் சேர்ந்த ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

தாங்கள் வீடுகளை விட்டு வெளியேற முனைந்த போது காவல்துறையினர் உள்ளேயே இருக்குமாறு கூறி விட்டனர் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

அதேவேளை வடமேல் மாகாணத்தில் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. மறு அறிவித்தல் வரை அங்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குருநாகல மாவட்டத்தில் பல இடங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

எனினும், சில இடங்களில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த காவல்துறையினரும், இராணுவத்தினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *