சிறிலங்கா குண்டுத் தாக்குதல்கள் – இந்தியா கடும் கண்டனம்
சிறிலங்காவில் இன்று இடம்பெற்றுள்ள மோசமான குண்டுத் தாக்குதல்களை இந்தியா வன்மையைாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“பல பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும் பலர் காயமடைவதற்கும் காரணமான, சிறிலங்காவில் இன்று காலை பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எமது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வாழ்த்துகிறோம்.
எல்லா வடிவங்களிலுமான தீவிரவாத செயல்களையும் இந்தியா எப்போதும் எதிர்த்து வருகிறது. எல்லை கடந்த தீவிரவாதம் உள்ளிட்ட தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இந்தியா கோருகிறது.
எந்தவொரு தீவிரவாதச் செயலையும் எவரும் நியாயப்படுத்த முடியாது.
கோரமான மிகவும் வெறுக்கத்தக்க இந்தச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களை துரிதமாக நீதியின் முன் நிறுத்தக் கோருகிறோம்.
இந்த இக்கட்டான தருணத்தில் சிறிலங்கா அரசாங்கத்துடனும், மக்களுடனும் நாங்கள் இணைந்திருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தும், இந்த தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாகவும், கீச்சகப் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.