சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டொலர் நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சுவிஸ் சட்டமா அதிபர் முறையீடு செய்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேரையும், குற்றவியல் குழுவொன்றை ஆதரித்தார்கள் என்று தண்டிக்க முடியாது என சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள சுவிஸ் சட்டமா அதிபர் பணியகம், தொடர் சட்ட செயற்பாடுகளுக்கான காரணத்தை விபரிக்கவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு 15.3 மில்லியன் டொலரை, ஆயுதங்கள் வாங்குவதற்காக திரட்டினார்கள் என்று, சுவிஸ், ஜேர்மனி, சிறிலங்கா நாடுகளைச் சேர்ந்த 13 பேருக்கு எதிராக, 9 ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு சுவிஸ் சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஆண்டு நடந்த எட்டு வார கால விசாரணைகளின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆறரை ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்குமாறு அரச சட்டவாளர் கோரியிருந்தார்.
எனினும், விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பு என்று கூறுவதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அத்துடன் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டதுடன் சிலர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே, இந்த தீர்ப்புக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீடு செய்துள்ளது.