மேலும்

குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் கோத்தா – நீதிமன்றில் நின்று பிடிக்காது என்கிறார்

அமெரிக்காவில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் அடிப்படையற்றவை என்று நிராகரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்த வழங்குகள் தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் சிறிலங்காவில் அரசியல் மாற்றத்துக்கான ஊக்கத்தை அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு  வழக்குகள் தொடர்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை கோத்தாபய ராஜபக்ச லொஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது சட்டவாளர்களைச் சந்தித்துள்ளார்.

இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   “செயல்முறைகளை தாமதப்படுத்துவதற்காகவும், எனது ஊக்கத்தைக் கெடுப்பதற்காகவுமே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை கவனிக்கும் பொறுப்பை லொஸ்ஏஞ்சல்சில் உள்ள எனது சட்டவாளர்களிடம் கையளித்துள்ளேன்.

எங்கள் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த வழக்குகள், என்னையும் எனது ஆதரவாளர்களையும் திசை திருப்புவதற்கான முயற்சியே ஆகும். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள்  நீதிமன்றத்தில் தாக்குப் பிடிக்காது.

இவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்.  நாட்டுக்கு வெளியில் இருக்கின்ற சிலர் எமது செயல்முறைகளை  தாமதப்படுத்தவே இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். ஏனென்றால் நான் பலமான வேட்பாளராக இருக்கிறேன்.

அவர்கள் தாக்குதல் நடத்தட்டும். நான் தயாராகவே இருக்கிறேன்.

வெளிநாட்டு முகவர்களின் இந்த தந்திரோபாயம் எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் இன்னமும் ஊக்கத்தை அளிக்கும்.

சிறிலங்காவில் உள்ள மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர. அவர்கள்  மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

நாங்கள் அதிகாரத்தில் இருந்த போது மிகப்பெரிய அடைவுகளை பெற்றோம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கவில்லை. செய்து காட்டினோம்.

வடக்கிலும், தெற்கிலும் வாழும் மக்களின் பொதுவான பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும்.

வெளியாரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள், மீண்டும் சரியான தலைமைத்துவம் ஒன்றின் கீழ் நாட்டைக் கொண்டு வர வேண்டும் என்று எமது மக்களை ஊக்கப்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *