மேலும்

வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்தால் தான் கூட்டணி – ‘கை’யை மிரட்டுகிறது ‘மொட்டு’

வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தால் தான், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுக்களைத் தொடர முடியும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,

“வரும் 5ஆம் நாள் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கப் போகும் முடிவு முக்கியமானது.

வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல் போனால், அது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைக்கும் முயற்சிகளைப் பாதிக்கக் கூடும்.

வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி கடைசி நேரத்தில் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது.

ஐதேக அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது எப்படி என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் கேள்வி எழுப்புகின்றனர்.

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பின்னரே, சுதந்திரக் கட்சியுடன் மூன்றாவது சுற்றுப் பேச்சு நடத்தப்படவுள்ளது.

வாக்கெடுப்பில் சுதந்திரக் கட்சி எப்படி நடந்து கொள்ளும் என்பதைப் பொறுத்தே கூட்டணிப் பேச்சுக்கள் அமைந்திருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *