விமானக் கொள்வனவுக்கு எதிர்ப்பு – அமைச்சரவையில் சிறிசேன சீற்றம்
சிறிலங்கா விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபரினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அப்போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடந்த நான்கு ஆண்டுகளில் விமானப்படை மற்றும் கடற்படைக்கான விமானங்கள் மற்றும் கப்பல்களைக் கொள்வனவு செய்ய முயன்றபோதெல்லாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், அவற்றைக் கொள்வனவு செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.
அத்துடன் விமானங்கள், கப்பல்களின் வெற்றிடத்தை மீள் நிரப்புவதற்கான, பரிந்துரைகளைச் செய்வதற்கு, குழுவொன்றை அமைக்குமாறும், சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விமானப்படைக்கு வாங்கவுள்ள விமானம், 40 ஆண்டுகள் பழைமையானது என்பதால் தான் நிதி அமைச்சு எதிர்ப்புத் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.