மூதூர் பிரதேச செயலகத்தை பிரிப்பதற்கு சம்பந்தன் கடும் எதிர்ப்பு
திருகோணமலை – மூதூர் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மூதூர் பிரதேச செயலகத்தை பிரித்து, மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேச செயலகங்களை உருவாக்கும் நடவடிக்கை, இந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இருக்கும் என்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம், இரண்டு முஸ்லிம் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படும் என்றும், இரண்டிலுமே தமிழர்கள் சிறுபான்மையினராகும் நிலை ஏற்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புதிய பிரதேச செயலகத்தை உருவாக்கும் செயல்முறைகளை இடைநிறுத்துமாறும், சிறிலங்கா பிரதமரை கோரியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாக தான் இருக்கின்ற போதும், தனது மாவட்டத்தின் கீழ் உள்ள மூதூர் பிரதேச செயலகத்தை பிரிக்கின்ற விவகாரம் தொடர்பாக, தனது கருத்துக் கோரப்படவோ, தகவல் தெரிவிக்கப்படவோ இல்லை என்றும், ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.
70,188 மக்கள் வசிக்கும், மூதூர், பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில், 26, 608 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.