மேலும்

சிறிலங்காவுடன் இராஜதந்திர, இராணுவ உறவுகளை வலுப்படுத்த வேண்டும் – அமெரிக்க ஆய்வாளர்

சிறிலங்காவுடன் இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகளுக்கு  அமெரிக்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் பழமைவாத  சிந்தனையாளரான, ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

வொசிங்டனை தளமாக கொண்ட, ஹெரிரேஜ் பவுண்டேசனின் ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தயாரித்துள்ள ‘சிறிலங்கா: சுதந்திரமான திறந்த இந்தோ- பசுபிக் மூலோபாயத்துக்கு ஒரு சோதனையான வழக்கு’ என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா விவகாரம், தவறாக கையாளப்பட்டால், சிறிலங்காவில் ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலை ஏற்படும்.

அது, 2015 ஆட்சி மாற்றத்தை அடுத்து சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான உறவுகளில் அண்மையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றிகளை பாதிக்கும்.

அத்துடன், இந்தியப் பெருங்கடலில் சீனா காலூன்றுவதற்கு வழிவகுக்கும். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான போட்டி அதிகரிக்கும்,

டிரம்ப் நிர்வாகத்தின் பிராந்திய மூலோபாயத்திற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.

ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியடைந்தாலும், வரவிருக்கும் தேர்தல்களில் செல்வாக்குமிக்க ராஜபக்ச குடும்பத்தினர், அதிகாரத்திற்கு திரும்புவர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

2015இல் மகிந்த ராஜபக்ச வெளியேற்றப்பட்டதில் இருந்து, சிறிலங்கா- அமெரிக்க  உறவுகள், தளைத்தோங்கியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கடற்படையின் புதிய விநியோக கேந்திரமாக சிறிலங்கா மாறியுள்ளது.

ஒருவேளை அவ்வாறு நடந்து, ராஜபக்சவினர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால், ஒரு வரம்புக்குட்பட்டு, சிறிலங்கா மக்களின் விருப்பங்களை மதிக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும்.

அடிப்படை ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான தரங்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் எந்தவொரு எதிர்கால சிறிலங்கா அரசாங்கத்தையும் நடத்த வேண்டும்.

சிறிலங்காவுடன், இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளுக்கு அமெரிக்க அரசாங்கம், முன்னுரிமை அளிக்க வேண்டும். சீனாவின் பாதை மற்றும் அணை முனைப்புத் திட்டத்துக்கு மாற்றாக,  பிராந்தியக் கூட்டுகள் மற்றும் புதிய அபிவிருத்தி நிதிக் கருவிகளை சிறிலங்காவுக்கு வழங்க வேண்டும்.

ராஜபக்ச ஆட்சியில் இருந்து  வெளியேற்றப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிகம் சுதந்திரமான, திறந்த நாடாக மாறியுள்ளது.

அடுத்து எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இந்தப் போக்கில் இருந்து மாறாத தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்காவும், சிறிலங்காவும் ஆர்வம் கொண்டுள்ளன” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *