மன்னார் புதைகுழி மர்மம் இன்று வெளிவரும்?
மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனை அறிக்கை பெரும்பாலும் இன்று வெளியாகும் என்று சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக நேற்று மன்னார் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச,
‘அமெரிக்க ஆய்வகம், அதிகாரபூர்வ பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்துக்கும் எனக்கும் அனுப்பி வைத்துள்ளது.
நீதிவான் அந்த அறிக்கையை இந்த வழக்கு ஆவணத்துடன் இணைப்பார். பொதுமக்கள் அந்த ஆவணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பாலும் இன்று அந்த அறிக்கையின் விபரங்கள் வெளியாகும்.
புதைகுழி அகழ்வுடன் தொடர்புடைய அதிகாரிகள், விரைவில் நீதிவானைச் சந்தித்து அகழ்வுப் பணிகளை தொடருவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.