மேலும்

திருக்கேதீச்சர வரவேற்பு வளைவு உடைப்பு – பரவலாக அதிருப்தி, கண்டனம்

மன்னார் – திருக்கேதீச்சர ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் முகப்பில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவு அகற்றப்பட்ட சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ள அதேவேளை, வரவேற்பு வளைவை மீண்டும் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருக்கேதீச்சர ஆலயத்தில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில், நேற்று ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அந்தப் பகுதி பங்குத்தந்தை உள்ளிட்ட கத்தோலிக்கர்கள் சிலர், வரவேற்பு வளைவைப் பிடுங்கி, சேதப்படுத்தி அங்கிருந்து அகற்றினர்.

இந்தச் சம்பவம், மத வேறுபாடுகளின்றி தமிழ் மக்கள் மத்தியில், கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

சமூக வலைத்தளங்களில் பரவிய, வரவேற்பு வளைவு உடைக்கப்பட்ட காட்சிகள் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் சர்வமதப் பேரவையில் இருந்து வெளியேறுவதாக, மன்னார், இந்து குருமார் பேரவையும் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், கத்தோலிக்க திருச்சபையின், யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார்,இந்தச் சம்பவத்தினால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், கலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் செயலுக்காக கண்டனம் தெரிவிப்பதாகவும், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள,  தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன்,  வரவேற்பு வளைவு மத வன்முறையாளர்களால் உடைத்து நொருக்கப்பட்டதும், அவ்வேளையில்  அங்கு எழுப்பட்ட கோசங்களும் ஒட்டுமொத்த தமிழினத்தையுமே வெட்கக் கேட்டுக்கும், சாபக்கேட்டுக்கும் உள்ளாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறும், உடைக்கப்பட்ட வளைவை மீள அமைக்குமாறும், சிவராத்திரி விழாவுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்குமாறும் மன்னார் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இன்று இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர்,  மன்னார் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து, உடைக்கப்பட்ட வளைவை, உடனடியாக மீள அமைத்து, நான்கு நாட்களுக்கு அதனை பேணுமாறு மன்னார் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, உடைக்கப்பட்ட வளைவை மீளமைக்கும் பணிகள் இன்று இடம்பெற்று வருகின்றன. அதேவேளை அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2 கருத்துகள் “திருக்கேதீச்சர வரவேற்பு வளைவு உடைப்பு – பரவலாக அதிருப்தி, கண்டனம்”

  1. Esan Seelan
    Esan Seelan says:

    பாவமன்னிப்பு கேட்பது தூக்கு காவடி எடுப்பது மக்கா பாேவது தானம் வழங்குவது எல்லாம் வாழ்க்கையில் செய்த பிழைகளை பிழையென உணர்ந்து திருந்தி நடக்க நினைப்பவனுக்கு மட்டும் தான்பாெருந்தும்..ஒவ்வாெரு தடவையும் செய்த பிழைகளுக்காக மன்னிப்பு கேட்க முனைபவனுக்கு நரகம் தான் பதில்… தற்பாேதைய சமுதாயம் மனிதாபிமானம் அற்றுவிட்டது ஒவ்வாெரு மன்னிப்பும் நாகரீகமகிவிட்டது.உதாரணத்துக்கு இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருவன் தூக்கு காவடி எடுப்பதானால் அவன் மறுபிறவி எடுத்தவன் அல்லது ஒரு உயிரை எடுத்திருப்பான் இது பாேலத்தான் அனைத்து பாவங்களும் மன்னிப்புக்களும்….

  2. Mano says:

    அப்போது, அந்தப் பகுதி பங்குத்தந்தை உள்ளிட்ட கத்தோலிக்கர்கள் சிலர், வரவேற்பு வளைவைப் பிடுங்கி, சேதப்படுத்தி அங்கிருந்து அகற்றினர்.

    Shame on Christianity . Now , do the Tamil Catholics want the Tamil Hindu Blood ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *