மேலும்

அமெரிக்க- சிறிலங்கா பாதுகாப்பு உடன்பாடு ஆபத்தானது – தயாசிறி

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் விரைவில் கையெழுத்திடப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றின் மீது  மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

“இதன் மூலம், இலங்கைத் தீவு அமெரிக்காவின் மற்றொரு ஒகினாவா அல்லது டியாகோ கார்சியா தளம் போல மாறும்.

திருகோணமலையில் 36,000 ஏக்கரில் சேவை நிலையம் ஒன்றை அமெரிக்கா அமைத்துக் கொள்வதற்கான வசதிகளை இந்த உடன்பாடு, வழங்கவுள்ளது.

இந்த சேவை நிலையத்தில் பணியாற்றும் அமெரிக்கா அதிகாரிகளும், சிவிலியன்களும், சிறிலங்காவின் அரசியலமைப்பு, குற்றவியல் அல்லது சிவில் சட்டத்துக்குட்பட்டு செயற்படுபவர்களாகவோ,  சிறிலங்காவின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்பட்டவர்களாகவோ இருக்கமாட்டார்கள்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதிகளுக்கிடையில், நடத்தப்பட்ட பல சுற்று பேச்சுகளுக்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட வரைவு  உடன்பாட்டின் படி, வியன்னா பிரகடனத்தின் கீழ் இராஜதந்திர தூதரகங்களில் பணியாற்றும்  நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு உரித்தான சலுகைகள், விலக்குகள் மற்றும் முன்னுரிமை ஆகியன, இந்த சேவை நிலையத்தில் பணியாற்றும் அமெரிக்க அதிகாரிகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள்,  அமெரிக்க அடையாளத்துடன் குழுவாக அல்லது தனியான பயண உத்தரவுடன் சிறிலங்காவுக்குள் நுழையலாம், வெளியேறலாம். அமெரிக்காவினால் வழங்கப்பட்ட அனைத்து  தொழில்துறை உரிமங்களின் செல்லுபடித்தன்மையை சிறிலங்கா ஏற்றுக் கொள்ளும்.

இதன் அர்த்தம் என்னவெனில், சிறிலங்காவின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் அவர்கள் சோதனையிடப்படவோ, கண்காணிக்கப்படவோ கூடாது. போக்குவரத்து காவலர்களால் கூட சோதனையிடப்படக் கூடாது.

அமெரிக்கர்கள் மீது அமெரிக்க ஆயுதப்படை அதிகாரிகள் ஒழுக்காற்று கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்கிறது.  இதன் மூலம், சிறிலங்காவில்  உள்ள அமெரிக்கர்கள் மீது குற்றவியல் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இதன் அர்த்தம், அவர்கள் தேசத்தின் சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் என்பதாகும்.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தினால், இயக்கப்படும் கப்பல்கள்  மற்றும் வாகனங்கள்,  சிறிலங்காவின் பிராந்திய எல்லைக்குள் சுதந்திரமாக நுழையலாம், வெளியேறலாம் என்றும் அமெரிக்கத் தூதரகம் முன்மொழிந்துள்ளது.

இதன்போது, அத்தகைய வாகனங்கள் தரையிறங்குவதற்கான, தரித்து நிற்பதற்கான, துறைமுகத்தில் நிறுத்துவதற்கான,  விமானிகளுக்காக, என சிறிலங்கா அரசாங்கத்தினால் அறவிடப்படும் எந்தக் கட்டணமும், அறவிடப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

சிறிலங்காவின் பிராந்தியத்துக்குள், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான அல்லது அதனால் இயக்கப்படும் விமானங்களை பறப்பதற்கும், தரிப்பதற்கும், மற்றும் ஏனைய வழிகளில் கட்டணங்கள் அறவிடப்படுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம், கோரப்பட்ட மற்றும் பெறப்பட்ட சேவைகளுக்கான நியாயமான கட்டணங்களை செலுத்த வேண்டும்.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் விநியோகங்கள், கருவிகள், தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்வதற்கு அல்லது ஏற்றுமதி செய்வதற்கு, எந்த உரிமங்களோ, கட்டப்பாடுகளோ, சுங்க தீர்வைகளோ, வரிகளோ, வேறெந்த கட்டணங்களோ சிறிலங்காவுக்குள் அறவிப்படாது.

அமெரிக்க தொழில்துறையினர் மற்றும் சாரதிகளுக்கான உரிமங்கள் தொடர்பிலும் அதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் முன்மொழிந்துள்ளது.

அமெரிக்க ஆயுதப்படைகளுக்குத் தேவையான வானொலி அலைக்கற்றைகளைப் பயன்படுத்தவும் சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்கும்.

தமது சொந்த தொலைத்தொடர்புமுறையை செயற்படுத்துவதற்கு, அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் அனுமதிக்கப்படலாம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *