மேலும்

சிறிலங்காவின் பல பகுதிகள் வெள்ள ஆபத்தில் – 12 மாவட்டங்களில் 23 ஆயிரம் பேர் பாதிப்பு

சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை மற்றும் சூறைக்காற்று, மின்னல் போன்றவற்றினால், 6 பேர் பலியாகினர். அத்துடன் 12 மாவட்டங்களில் 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 22,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்மேற்குப் பருவ மழையினால், இரத்தினபுரி, காலி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, அனுராதபுர, முல்லைத்தீவு, திருகோணமலை, பதுளை, நுவரெலிய, மாத்தளை ஆகிய 12 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

களனி கங்கை, களுகங்கை, ஜின் கங்கை, நில்வள கங்கை ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. மேலும் பல ஆறுகளில் அபாய கட்டத்துக்கு மேலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கையில் வெள்ளம் அதிகரித்தால், கொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவெல, தொம்பே உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் 5 அடிக்கும் அதிகமான உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியன இணைந்து மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

தொடர்ந்து 100 தொடக்கம் 150 மி.மீ வரையான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று அறிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம்,பல மாகாணங்களில் நிலச்சரிவுகள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், பாரிய அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்குமாறும், முப்படையினர், காவல்துறையினர் மற்றும் அரச அதிகாரிகளை பணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *